Tuesday 11 December 2012

சபர்- பீடை மாதமா?



ஸபர் மாதம்-நாகரீகம் உச்சத்தை அடைந்துவிட்ட இந்த 21 ம் நூற்றாண்டிலும்- சடங்குகளும்,சம்பிரதாயங்களும் சில இஸ்லாமிய இல்லங்களில் மலிந்து காணப்படுகிறது.

திருமணங்கள் நடத்திப்பார்ப்பதில்லை- தொழில் தொடங்க முன் வருவதில்லை-நோயாளிகளை நலம் விசாரிப்பதில்லை-பயணங்கள் புறப்படுவதில்லை-புது வீடுகளில் குடி போவதில்லை.

என்ன செய்து விட்டது ஸபர்?

வானத்திலிருந்து இறங்கும் சோதனைகள் மொத்தமும் ஸபர் மாதத்தில் தான் இறங்குகிறது என்ற மூடத்தனமான ஒரு நம்பிக்கை-நம்முடைய ஈமானுக்கும்,கொள்கைக்கும் எவ்வளவு ஆபத்தானது என்று ஏன் விளங்குவதில்லை.

நாம் செய்த தவறுகளால் நாம் சந்திக்கும் சோதனைகளுக்கு –காலங்களையும் நேரங்களையும் ஒன்றும் அறியா உயிரினங்களையும் இன்னும் எத்தனை காலத்திற்கு பலியாக்கப்போகிறோம்.

مَّا أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللَّـهِ ۖ وَمَا أَصَابَكَ مِن سَيِّئَةٍ فَمِن نَّفْسِكَ

உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது.(4:79)

நம்முடைய விதிக்கொள்கையை புரிந்துகொள்ள இந்த ஒரு வசனமே போதுமானதாகும்
.
نعيب زماننا والعيب فينا

குறையை நம்மிடம் வைத்துக்கொண்டு நாம் காலத்தை பழிகூறிக்கொண்டிருக்கிறோம் என்று சொன்ன ஒரு கவிஞனின் வரிகள் மூடநம்பிக்கையை குழிதோண்டி புதைக்கவில்லையா?

إنَّ كل زمان شغله المؤمن بطاعة الله - تعالى - فهو زمان مُبارك عليه، وكل زمان شغله العبد بمعصية الله - تعالى - فهو شؤم عليه؛ لأنَّ الشؤم في الحقيقة هو معصية الله - تعالى - كما قال ذلك ابن مسعود - رضي الله عنه.

தரித்திரம் காலத்தில் இல்லை,துற்குறி நேரத்தில் இல்லை,மனிதனே!நீ செய்யும் பாவத்தில் உள்ளது என்று சொன்ன ஹழ்ரத் இப்னு மஸ்வூத் ரலி அவர்களின் வார்த்தைகள் உரைக்க வேண்டாமா?

மனிதன் தான் செய்யும் தவறுக்கு காரணத்தை தேடுவது மனிதனின் பலகீனம்,அந்த பலகீனத்தை மறைக்க காலத்தை குறை கூறுவது அவனின் வழக்கம்.

காகம் உன் விருந்தாளிகளை உனக்கு அறிவிக்குமானால்-ஆந்தை மரணத்தை உனக்கு உணர்த்துமானால்-பூனை உனக்கு நீ செல்லும் காரியத்தின் தோல்வியை அறிவிக்குமானால்-விலை மதிப்பில்லா உன் ஈமானை பறவைகள்,மிருகங்களின் காலுக்கடியில் அடமானம் வைத்துவிட்டாய் என்று சொல்வேன்.

பாவத்தை விட பித்அத் ஆபத்தானது,ஏனெனில் பாவம் செய்பவன் ஒரு காலம் தவ்பா செய்வான்,பித்அத்காரன் மன்னிப்பு தேடமாட்டான், காரணம் அதை வணக்கமாக எண்ணி செய்கிறான்.

அதனால் தான் நபி ஸல் அவர்கள் அறியாமைக்கால பழக்க வழக்கங்கள் தன் தோழர்களிடம் தென்படும்போது உடனடியாக அதை களையும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

1:

«عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وآلِهِ وَسَلَّمَ إِلَى حُنَيْنٍ -وَنَحْنُ حُدَثَاءُ عَهْدٍ بِكُفْرٍ-، ولِلْمُشْرِكِينَ سِدْرَةٌ يَعْكُفُونَ عِنْدَهَا، ويَنُوطُونَ بِهَا أَسْلِحَتَهُمْ يُقَالُ لَهَا: ذَاتُ أَنْوَاطٍ، قَالَ: فَمَرَرْنَا بِالسِّدْرَةِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ, اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ كَمَا لَهُمْ ذَاتُ أَنْوَاطٍ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وآله وَسَلَّمَ: اللهُ أَكْبَرُ، إِنَّهَا السُّنَنُ، قُلْتُمْ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ كَمَا قَالَتْ بَنُو إِسْرَائِيلَ: ﴿اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةٌ قَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُونَ﴾ [الأعراف: 138]، لَتَرْكَبُنَّ سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ»(١- أخرجه الترمذي في «سننه» كتاب الفتن

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். தாத்து அன்வாத்என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு தாத்து அன்வாத்துஎன்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்என்று கூறினோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ்!. அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்; என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையை படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ வாக்கிதுல்லைசி (ரலி)
நூல்:திர்மிதி

2:

அன்றைய அறியாமைக் கால மக்கள் நோய் உண்டாகக் காரணமே தொற்றுதான் என்றும், இறைவனுக்கு இதில் தொடர்பில்லை என்றும் கருதி வந்தனர். இந்த தவறான கருத்தை களைந்திடும் முகமாகவே நபி (ஸல்) அவர்கள் –

ما جاء عنه -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: ((لا عدوى، ولا صفر، ولا هامة؛ فقال أعرابي: يا رسول الله! فما بال إبلي تكون في الرمال كأنها الظباء، فيأتي البعير الأجرب فيدخل بينها فيجربها؟ قال: فمن أعدى الأول؟

தொற்றுநோய் கிடையாது,ஸபர் பீடையும் கிடையாது,ஆந்தை சகுனமும் இல்லை- என்று சொன்னார்கள். அப்போது, கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவைகளின் நிலை என்ன? (தொற்று நோய் இல்லையா?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அப்படி என்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயை) தொற்றச் செய்ததுயார்? என்று திருப்பிக் கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

3:

عن أبي هريرة أن النبي  أدرك شيخا يمشي بين ابنيه يتوكأ عليهما، فقال النبي  ما شأن هذا قال ابناه يا رسول الله كان عليه نذر، فقال النبي  اركب أيها الشيخ فإن الله غني عنك وعن نذرك واللفظ لقتيبة وابن حجر

صحيح مسلم

ஹழ்ரத் அபூ ஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தன் இரு மகன்களின் கை தாங்களாக நடந்துபோய்க்கொண்டிருந்த ஒரு வயோதிகரை கண்ட நபி ஸல் அவர்கள் –இவருக்கு என்ன நேர்ந்தது?என வினவினார்கள்.அதற்கு அவரின் இருமகன்கள்-இவர் நடந்தே ஹஜ்ஜுக்கு செல்லவேண்டும் என்று நேர்ச்சை செய்துள்ளார் என்று பதில் கூறினார்கள்.அதற்கு நபி ஸல் அவர்கள்-பெரியவரே!உம்மை கஷ்டப்படுத்தும் இந்த நேர்ச்சை அல்லாஹ்வுக்கு தேவையில்லை.எனவே வாகனித்து செல்லும் என்று கூறினார்கள்.

4:

وذكر حديث ابن عباس قال: بينما رسول الله صلى الله عليه وسلم يخطب إذا هو برجل قائم في الشمس فسأل عنه، فقالوا: هو أبو إسرائيل، نذر أن يقوم ولا يقعد ولا يستظل ولا يتكلم ويصوم. فقال النبي صلى الله عليه وسلم: (مروه فليتكلم وليستظل وليقعد وليتم صومه

البخاري

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி ஸல் அவர்கள் குத்பா பிரசங்கம் செய்துகொண்டிருக்கும் போது ஒருவர் வெயிலில் நின்று கொண்டிருந்தார்.காரணம் கேட்டபோது –இவர் ஒரு நேர்ச்சை செய்துள்ளார்.அதாவது-உட்காரமாட்டேன்,வெயிலில் நிற்பேன்,யாருடனும் பேசமாட்டேன்,நோன்பு வைப்பேன்.என்று பதில் கூறி னார்.அதைக்கேட்ட நபி ஸல் அவர்கள்-அவரை பேசச்சொல்லுங்கள்,நிழலில் உட்காரச்சொல்லுங்கள்,அவரின் நோன்பை மட்டும் பூர்த்தியாக்கச் சொல்லுங்கள்.என்று சொல்லி அனுப்பினார்கள்.

அவ்வாறு உமர் ரலி அவர்கள்- மக்களின் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதில் கடுமையான போக்கை கடைபிடித்து வந்ததை பார்க்க முடிகிறது.
5:

ما رواه البخاري عن طارقِ بنِ عبدِ الرّحمنِ قال:
انْطَلَقْتُ حَاجًّا، فَمَرَرْتُ بِقَوْمٍ يُصَلُّونَ، قُلْتُ: مَا هَذَا الْمَسْجِدُ ؟ قَالُوا: هَذِهِ الشَّجَرَةُ حَيْثُ بَايَعَ رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلّم بَيْعَةَ الرِّضْوَانِ ! فَأَتَيْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ سَعِيدٌ: حَدَّثَنِي أَبِي أَنَّهُ كَانَ فِيمَنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صلّى الله عليه وسلّم تَحْتَ الشَّجَرَةِ، قَالَ: فَلَمَّا خَرَجْنَا مِنْ الْعَامِ الْمُقْبِلِ نَسِينَاهَا، فَلَمْ نَقْدِرْ عَلَيْهَا، فَقَالَ سَعِيدٌ: إِنَّ أَصْحَابَ مُحَمَّدٍ صلّى الله عليه وسلّم لَمْ يَعْلَمُوهَا وَعَلِمْتُمُوهَا أَنْتُمْ ؟! فَأَنْتُمْ أَعْلَمُ.

தாரிக் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

நான் ஹஜ்ஜுக்கு சென்றபோது ஒரு இடத்துக்கு அருகே ஒரு கூட்டம் தொழுது கொண்டிருந்தனர்-இது என்ன இடம்?என்று நான் கேட்டேன் –இது ஹுதைபிய்யாவில் நபி ஸல் அவர்களிடம் அருமை தோழர்கள் பைஅத் செய்த புனித மரம் இருந்த இடம் என்று கூறினர் –
இந்த செய்தியை ஸஈத் இப்னுல் முஸய்யப் ரஹ் அவர்களிடம் கூறினேன்-அதை கேட்ட அவர்கள்-என் தந்தை நபியுடன் அந்த பைஅத்தில் கலந்து கொண்டவர்,அவருடன் மறு ஆண்டு ஹஜ்ஜுக்கு சென்றபோது-அந்த இடத்தை நாங்கள் மறந்து விட்டோம் என்று கூறினார்.

இதை கூறிய ஸஈத் ரஹ் அவர்கள் –நபித்தோழர்களுக்கு தெரியாத இடம் உங்களுக்கு தெரிந்துவிட்டதா?என்றார்கள்.

فقد أخرجه ابن سعد في الطّبقات (2/100) عن نافع قال: كان النّاس يأتون الشّجرة الّتي يقال لها شجرة الرضوان فيصلّون عندها، قال: فبلغ ذلك عمر بن الخطّاب رضي الله عنه، فأوعدهم فيها وأمر بها فقطعت.

உமர் ரலி அவர்களின் ஆட்சிக்காலத்தில் அந்த மரத்திற்கு அருகே மக்கள் தொழ ஆரம்பித்து விட்டனர் என்று கேள்விப்பட்ட உமர் ரலி அவர்கள்-அதை வேறுடன் வெட்ட உத்தரவிட்டார்கள்.

அறியாமை கால பழக்கங்கள் அனைத்தையும் என் காலுக்குகீழ் போட்டு புதைக்கிறேன் என்று சூழுரைத்த நபி ஸல் அவர்களின் மார்க்கத்தில்- ஸபர் என்ற பெயரால் அரங்கேறிவரும் அறியாமையும்,மூடநம்பிக்கையும் களையெடுக்கப்படவேண்டும்.

அறியாமை கால அரபியர்கள் இந்த மாதத்திற்கு ஸபர் என்று பெயர் வைத்தனர்.ஸபர் என்றால் காலியானது,வெற்றிடம் என்று பொருள்.

ஹஜ்ஜு காலம் முடிந்து ஊரே வெளியூர் புறப்பட்டு காலியாகி விடுவதால் இந்த பெயரை சூட்டினர்.ஆனால் இஸ்லாம் அதற்கு ஸபருல் முழப்பர் வெற்றி ஸபர் என்று பெயர் சூட்டியது.காரணம்-

முஸ்லிம்களின் வாழ்வை பொருளாதார ரீதியாகவும்,பாதுகாப்பு ரீதியாகவும் செழிப்பாக்கிய கைபர் வெற்றி இந்த ஸபர் மாதத்தில் தான் கிடைத்தது.

அவ்வாரே உலக அரங்கில் இஸ்லாத்துக்கும்,முஸ்லிம்களுக்கும் அங்கீகார  த்தை பெற்றுத்தந்த சரித்திர சிறப்புமிக்க நாயகத்தின் ஹிஜ்ரத் பயணம் ஸபர் மாதம் பிறை 27 ல் தான் துவங்கியது.

எனவே ஸபர் பீடையல்ல,ஒருவகையில் பரக்கத்தான மாதமாகும்.

 இஸ்லாம் அறிவை ஊக்கப்படுத்தும் மார்க்கம்

அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளில் மிகப்பெரும் செல்வம் அறிவு செல்வமாகும்.மற்ற படைப்பினங்களை விட்டும் அவனை தனிமைப்படுத்தி காட்டுவதும் அதுவேயாகும்.அறிவை இழந்தவன் அனைத்தையும் இழப்பான்.

இஸ்லாம் அறிவால் அறிமுகமான மார்க்கமாகும்.அறியாமை எனும் இருளில் மூழ்கிக்கிடந்த அந்த அரபுலக மக்களின் வாழ்வில் அறிவுச்சுடரை ஏற்றிவைப்பதே தன் முதல் கடமையாகயாகவும்,சவாலாகவும் ஏற்றுக்கொண்டது.

இஸ்லாம் கல்வி அறிவைப்பற்றி விரிவாக பேசுவதுடன், அல்குர்ஆனை சிந்திக்கும் போது இஸ்லாம் அறிவுக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தையும் தெளிவாக அறிந்து கொள்ளமுடியும்.

அல்குர்ஆனில் இல்ம் (அறிவு) என்ற வார்த்தை 80 இடங்களில் பயன்படுத்தப் படுகிறது,அக்ல் (பகுத்தறிவு) என்ற வார்த்தை 49 இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.ஹிக்மத் (ஞானம்) என்ற வார்த்தை 20 இடங்களில் கூறப்படுகிறது.

அவ்வாறு ஹதீஸ் நூட்களிலும் அறிவைப்பற்றிய தனி பாடப்பிரிவுகளை தவிர்க்கமுடியாதவையாகும்.

முதன் முதலாக இறங்கிய அல்குர்ஆனின் வசனங்களே அறிவைப் பற்றியும் அறிவின் அடிப்படைகளாகத் திகழும் வாசிப்பு, எழுத்து, எழுதுகோல் பற்றியும் பேசுவதைப் பார்க்கின்றோம்.

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ﴿١﴾ خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ ﴿٢﴾ اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ ﴿٣﴾ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ ﴿٤﴾ عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ

''(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். நீர் ஓதும், உமது இறைவன் மாபெரும் கொடையாளி, அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.'' (96:5)


அறிவையும்,அறிஞர்களையும் முன்னிலப்படுத்துவதுபோலவே மடமையையும் மடையர்களையும் புறம் தள்ளுகிறது.

خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ

எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.(7:199)

இஸ்லாம் அறியாமைக்கு எதிரான மார்க்கமாகும்.

ஒரு முஸ்லிம் கஞ்சனாக இருக்கலாம்,கோழையாக இருக்கலாம்,ஆனால் அறியாமையில் ஒருகாலமும் இருக்கக்கூடாது,அது அவனின் ஈமானுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

அறியாமையில் மிகப்பெரும் அறியாமை தன் மார்க்க விஷயத்தில் தோன்றும் அறியாமையாகும்.காரணம்,இங்கே கலிமா சொல்லக்கூட கல்வி அவசியம் என்று குர்ஆன் கூறுகிறது.

فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَـٰهَ إِلَّا اللَّـهُ

ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக.(47:19)

மூடநம்பிக்கைக்கு எதிரான அல்குர்ஆனின் அறைகூவல்கள்:

وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ

எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்;(17:36)

அன்றய மக்காவாசிகள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்துவிட்டால் அதன் பிறகு தன் வீட்டின் முன் வாசல் வழியே நுழையாமல் பின் வாசல் வழியே ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அதன் வழியாகவே வந்து போய்க்கொண்டிருந்தனர்.இதனை அவர்கள் நல்ல காரியமாக கருதி வந்தனர்.இதை கண்டிக்கும் விதமாக அல்லாஹ் இறக்கிய வசனம் தான் இவை:

وَلَيْسَ الْبِرُّ بِأَن تَأْتُوا الْبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَـٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَىٰ ۗ وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا ۚ وَاتَّقُوا اللَّـهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

(முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை, ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்;. நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.(2:189)

அவ்வாறு ஆரம்ப கால மக்கள் கஃபாவை தவாப் செய்யும்போது மேனியின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக தவாப் செய்து வந்தனர்.    நாங்கள் அணிந்துள்ள ஆடைகளுடன் பாவம் செய்துள்ளோம்,என்வே பாவம் செய்த ஆடையுடன் இப்புனித அமலை செய்யமாட்டோம் என்று காரணம் கூறுவார்கள்.இவர்களை குறித்து அல்குர்ஆன் –

يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்;(7:31)

எனவே தீன் என்பது இஷ்டப்பட்டதை செய்வதல்ல!இஸ்லாம் சொன்னதை செய்வதாகும்.

தஸ்பீஹை விட குர்ஆன் ஓதுவது சிறப்புதான்,அதற்காக தொழுகையில் ருகூவு,சுஜூதில் நான் குர்ஆன் தான் ஓதுவேன் என்றால் அது பித்அத் இல்லையா?

மினாவில் தொழுவதை விட ஹரமில் தொழுவது சிறப்பு தான்,அதற்காக ஹஜ்ஜுக்காலத்தில் ஒரு ஹாஜி துல்ஹஜ் 8 ல் நான் ஹரமில் தான் தொழுவேன் என்று சொன்னால் அது தவறில்லையா?

வணக்கமானாலும்,வாழ்க்கையானாலும் அல்லாஹ்வும்,ரசூலும்,நபித்தோ  ழர்களும் காட்டித்தராத ஒன்றை செய்வது அது அறியாமையே!
அப்படிப்பட்ட அறியாமையிலிருந்து அல்லாஹ் இந்த உம்மத்தை பாதுகாப்பானாக.

8 comments:

  1. அற்புதம்! மிக அற்புதம்

    ReplyDelete
    Replies
    1. அல்ஹம்து லில்லாஹ்.ஜஸாகல்லாஹு கைர்.

      Delete
  2. மூட நம்பிக்கைகளை முற்றாக ஒழித்த
    முத்தான தகவல்களை
    சத்தாகத் தந்த சாதனையாளரே!
    அருமையான உதாரணங்களுடன்
    அமைந்துள்ள அற்புதமான கட்டுரை.

    ReplyDelete
    Replies
    1. அல்ஹம்து லில்லாஹ்.ஜஸாகல்லாஹு கைர்.தங்களின் மேலான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. Jasakkallahu Khair!!!

    -Yousuf

    ReplyDelete