Wednesday, 29 May 2013

மார்க்க கல்வியும் மந்தநிலையும்


(மதரஸாக்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறுவதை ஒட்டி மார்க்க கல்வி குறித்த விழிப்புணர்வுக்காக இக்கட்டுரை இங்கு தரப்படுகிறது)

இஸ்லாம் அது ஒரு கல்வி மார்க்கம்.அறியாமை காலத்தில் அவதரித்த அறிவுச்சுடர் இஸ்லாம்.கல்வியை போதிப்பதையே தன் களப்பணியாக எடுத்துக்கொண்டு உலகின் மூலைமுடுக்கெல்லாம் அறிவு செல்வத்தை கொண்டு சென்றது.

ஆதி மனிதர் ஆதம் அலை அவர்கள் முதல் இறுதி நபியான அண்ணல் எம்பெருமான் ஸல் அவர்கள் வரை அல்லாஹ்விடம் அறிவை அதிகப்படுத்தி கேட்டுள்ளனர்.
கல்வியை தேட காலம் ஒரு தடையல்ல, மாத்திரமல்ல அதற்கு எல்லையும் இல்லை.அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை.
ஒவ்வொரு அறிவாளிக்கு மேலே ஒரு அறிவாளி உண்டு என்ற இறைமறை வசனத்தை இங்கு சிந்தனை செய்து பார்க்க வேண்டும்.

திருமறையின் முதல் வசனம் தொழுங்கள், 
நோன்பு வையுங்கள்,ஜகாத் கொடுங்கள்,ஹஜ் செய்யுங்கள்,உம்ரா செய்யுங்கள்,ஜிஹாத் செய்யுங்கள் என்றெல்லாம் இறக்கப்படாமல் படியுங்கள்,கல்வி கற்றுக்கொள்ளுங்கள் என்று இறக்கப்பட காரணம் என்ன?

கல்விக்கு எதுவும் நிபந்தனை இல்லை,ஆனால் எல்லா வணக்கங்களுக்கும் கல்வி அவசியமாகும்.
எப்படி தொழ வேண்டும்?எப்படி உம்ரா செய்யனும்?எப்படி ஹஜ் செய்யனும்அனைத்திற்கும் அறிவு அவசியம்.அதனால் தான் கல்வி கற்பது போர் செய்வதற்கு நிகரானது என நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

قال صلى الله عليه وسلم : " من جاء مسجدي هــــــذا لم يأته إلا لخير يتعلمه أو يعلمه 
 فهو بمنزلة المجاهد في سبيل الله... " . رواه ابن ماجة

யார் கல்வி கற்றுக்கொள்ளும் நோக்கத்தில் அல்லது கற்றுக்கொடுக்கும் நோக்கத்தில் என் பள்ளிக்கு வருவாரோ அவர் அல்லாஹ்வின் பாதையில் போர்செய்யும் போராளியின் அந்தஸ்து பெறுகிரார் என்றார்கள்.

திருக்குர்ஆனின் முதல் வசனம் படிப்பை வலியுறுத்தியும்,அதை தொடர்ந்து இறங்கிய சூரா கலமின் துவக்கம் எழுத்தை வலியுறுத்தியும் இறக்கியருளப்பட்டது.

கல்வி,அறிவுக்கு இஸ்லாம் வழங்கிய முக்கியத்துவத்தின் அளவிற்கு வேறு எந்த மதத்திலும் வழங்கப்படவில்லை.

பத்ரில் கைதியாக பிடிக்கப்பட்ட காபிர்களில் எழுத,படிக்க தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களில் ஒவ்வொருவரும் பத்து ஸஹாபிகளுக்கு எழுத,படிக்க கற்றுக்கொடுத்தால் அவர் விடுதலை என நபி ஸல் அவர்கள் அறிவிப்புச்செய்தார்கள்.

போர்களங்களில் கூட கல்வியாளர்களை இஸ்லாம் கண்ணியப்படுத்தியிருக்கிறது.
அபூ ஷாத் ரலி என்ற நபித்தோழர் ஒருவர் நபி ஸல் அவர்களின் குத்பாவை கேட்டு விட்டு இதை எனக்கு எழுதி தாருங்கள் என்று கேட்டார்கள்.
கல்வியில் ஆர்வமுள்ளவர்களை பாராட்டுவது நபியின் வழமை.
அவரின் இக்கோரிக்கையை கேட்டு முகம் சுழிக்காமல் மகிழ்ச்சியுடன் தம் தோழர்களை பார்த்து அவருக்கு என் குத்பாவை எழுதி கொடுங்கள் என்று கூறினார்கள்.
நபி ஸல் அவர்களின் குத்பாக்கள் பலநூட்கள் அவரிடம் இருந்தன.

ஹதீஸ் துறையில் மகத்தான சாதனை படைத்த ஹழ்ரத் அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஒரு தடவை இப்படி கூறினார்கள்.
அதிகமான ஹதீஸ்களை அறிவிப்புச்செய்ததிலும் மனனம் செய்ததிலும் நபித்தோழர்களில் எனக்கு போட்டி யாரும் இல்லை,ஆனால் ஒரே ஒரு ஸஹாபி உண்டு.அவர் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் ரலி அவர்கள் மட்டும் தான்,காரணம் அவருக்கு எழுத,படிக்க தெரியும்,எனக்கு எழுத படிக்க தெரியாது.
அல்லாஹு அக்பர்!வெறும் மனன சக்தியை மட்டும் வைத்துக்கொண்டு ஐயாரத்திற்கும் மேற்பட்ட ஹதீஸ்களை அறிவிப்புச்
செய்துள்ளார்கள்..

எது சிறந்த கல்வி?

எந்த கல்வியின் தேடலின் முடிவு அல்லாஹ்விடம் சென்று முடியுமோ அதுவே மிகச்சிறந்த கல்வியாகும், அப்படிப்பட்ட கல்வியையே இஸ்லாம் கற்றுக்கொள்ளச்சொல்லி போதிக்கிறது.

ஒரு மனிதன் கற்றுக்கொள்ளவேண்டிய அடிப்படையான,மற்றும் முதன்மையான கல்வி அல்லாஹ்வை பற்றிய கல்வியாகும் என இமாம் ஸஹபி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வை பற்றிய கல்வி, ஒரு மனிதனை நெறி படுத்தவும் பக்குவப்படுத்தவும் அவசியமாகும்.
மார்க்க கல்வியை தேடும் பணியில் ஒரு கூட்டம் ஒவ்வொரு ஊரிலும் அவசியம் இருக்கவேண்டு
மென அல்லாஹ் அழகாக போதிக்கிறான்.

فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ ﴾
[التوبة: 122]

குர்ஆனின் வசனம் சொல்லும் கருத்து போருக்கு ஒரு கூட்டம் சென்றாலும் கல்வி கற்க ஒரு கூட்டம் மதீனாவில் இருக்க வேண்டும். போருக்கு சென்றவர்கள் போரிலிருந்து திரும்பிய உடன் கல்வியை கற்றுக்கொள்ள வேண்டுமென போதிக்கிறது.


இன்றைய அவல நிலை?

மார்க்க கல்வியை கற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தேய்ந்துகொண்டே வருகிறது.
இந்நிலை நீடித்தால் இஸ்லாமிய சமுதாயம் மார்க்க அறிவுப்பஞ்சத்தால் மிகப்பெரும் பாதிப்புக்குள்ளாகுவதை யாரும் தடுக்க முடியாது.
தொட்டில் முதல் கப்ர் வரை கல்வியை தேடுங்கள் என்று வலியுறுத்தி கூறப்பட்ட ஒரு சமூகத்தில் மார்க்க கல்வியை தேடுவதில் ஏன் இந்த மந்த நிலை?

இதற்கான காரணங்களை தேடி பல கருத்தரங்
குகளும் ஆய்வரங்கங்களும் பட்டிமன்றங்களும் நடத்தி முடித்தாகிவிட்டது.இன்னும் தீர்வை எட்டவில்லை.

தமிழகத்தின் மொத்த மதரஸா மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கூட தாண்டவில்லை என்பது இன்னும் வருத்தமான செய்தி.
இதற்கு சமுதாயம் பல காரணங்களை முன்வைக்கிறது.அதில் பிரதானமானது மார்க்க கல்வியின் சிறைப்பையும் மாண்பையும் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமையாகும்.

மார்க்க கல்வியின் தேடல் என்பது வெறும் இமாமத்துக்கும் குத்பா பிரசங்கத்திற்கும் மட்டுமல்ல,மனித வாழ்வின் பிறப்பு முதல் இறப்பு வரை அத்துனைக்கும் மார்க்க வழிகாட்டல் தேவையாகும்.
சமூகம் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வும் சீர்திருத்தமும் மார்க்க கல்வியில் மட்டுமே உண்டு.

மார்க்க கல்வியை கற்றவர்களின் உலகியல் எதிர்காலம் அவ்வளவு பிரகாசமாக இல்லாமலிருப்பதும் மார்க்க கல்வியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட ஒரு காரணமாக சொல்வார்கள்.
ஆலிம்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய சமுதாயம் இதற்கு தார்மீகமான பொறுப்பேற்க வேண்டும்.
என் யானையை அழ வைத்துவிட்டால் பொன்னும் பொருளும் கொட்டித்தருவேன் என்று ஒரு அரசன் அறிவிப்புச்செய்தானாம்.
யானையை அழ வைக்க ஊரே முயற்சி செய்ததாம்.எவருடைய முயற்சியும் பழிக்கவில்லை.
இறுதியாக அந்த ஊரின் இமாம் யானையின் காதில் ஏதோ இரகசியமாக சொன்னாராம். அதை கேட்ட அந்த யானை விழுந்து விழுந்து அழுததாம்.
அரசரே ஆடிப்போய்விட்டாராம்.அப்படி என்ன யானையின் காதில் இமாம் சொல்லி இருப்பார்?

வேறு ஒன்னுமில்லைங்க.அவர் வாங்குகிற மாத சம்பளத்தை சொல்லி தொலைச்சுட்டாராம்.

இதை எங்களின் மதரஸாவின் நாஜிர் மறைந்த ஷாஹுல் ஹமீத் ஹள்ரத் தாமத் பரகாதுஹு அவர்கள் நகைச்சுவையாக கூறுவார்கள்.

உண்மையில் ஆலிம்கள் வருமானத்திற்காக வேலைசெய்பவர்கள் அல்ல.
ஆலிம்களுக்கு இது தொழிலல்ல,சமுதாய பணியாகவே இதை செய்து வருகிறார்கள்.இந்த கல்வியை கொண்டு உலகை தேடியவர்களெல்லாம் காலத்தால் காணாமல் போய்விட்டார்கள்.
தங்களின் கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்தால் அரசுப்பணிகள் முடங்கிப்போகும்.ஆனால் ஆலிம்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தம் செய்தால் உலகமே ஸ்தம்பித்துபோய் விடும்.

மார்க்க கல்வியில் முன்னோர்களின் ஆர்வம்:

قال ابن عباس رضي الله عنهما : لما مات رسول الله صلى الله عليه وسلم قلت لرجل من الأنصار : هلم يا فلان فلنطلب العلم ، فإن أصحاب رسول الله صلى الله عليه وسلمأحياء . قال : عجبا لك يا ابن عباس ! ترى الناس يحتاجون إليك وفي الناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم من فيهم ؟ قال : فتركت ذاك وأقبلت أطلب ، إن كان الحديث ليبلغني عن الرجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم قد سمعه من رسول الله صلى الله عليه وسلم فآتيه فأجلس ببابه فتسفي الريح على وجهي ، فيخرج إليّ ، فيقول : يا ابن عم رسول الله صلى الله عليه وسلم ما جاء بك ، ما حاجتك ؟ فأقول : حديث بلغني ترويه عن رسول الله صلى الله عليه وسلم فيقول : ألا أرسلت إليّ ؟ فأقول : أنا أحق أن آتيك . قال : فبقي ذلك الرجل حتى أن الناس اجتمعوا عليّ ، فقال : هذا الفتى كان أعقل مني . رواه الدارمي والحاكم

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்
நபி ஸல் அவர்கள் மரணித்தபோது அன்ஸாரி தோழர் ஒருவரிடம் வாருங்கள் நாம் கல்வி கற்றுக்கொள்வோம் என்று கூறினேன்.
அப்போது அவர், இப்னு அப்பாஸே! உன்னை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.நபித்தோழர்கள் ஹயாத்தாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பெரிய பெரிய அறிஞர்களெல்லாம் இருக்கும்போது மக்களுக்கு நீ கற்று என்ன சொல்லப்போக்றீர் என்றார்.
நான் அவரை விட்டுவிட்டு தனியாக கல்வியை தேடி பயணப்பட ஆரம்பித்தேன்.
நபித்தோழர்களிலிருந்து ஒருவர் ஒரு ஹதீஸை நபியிடம் கேட்டு அறிவிக்கி  றார் என்ற செய்தியை நான் கேள்விப்பட்டேன். உடனே அவரை சந்திக்க சென்றேன்.அவரின் வீட்டு வாசலில் அமர்ந்துவிட்டேன்.
பயணப்பட்டு வந்ததால் என் முகத்தில் புழுதி படிந்திருந்த்து.
வெளியே வந்த அந்த நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரின் சச்சா மகனே! என்ன விஷயமாக வந்தீர்?என வினவினார்.
நபி ஸல் அவர்களை தொட்டும் நீர் ஒரு ஹதீஸை அறிவிப்பதாக கேள்விப்பட்டேன் என்று கூறினேன்.
அதற்கு அவர், இத்ற்காக நீங்களே வரவேண்டுமா?யாரையாவது அனுப்பியிரு  க்கலாமே என்றார்.
இல்லை இந்த கல்விக்காக நானே வருவது தான் பொருத்தம் என்றேன்.
இவ்வாறு என் கல்வி தேடல் துவங்கியது.ஒரு கட்டத்தில் நபித்தோழர்கள் வாழ்ந்தகாலத்திலேயே இந்த வாலிபர் மிகச்சிறந்த அறிஞர் என்று ஒவ்வொரு ஸஹாபியும் பேசிக்கொண்டனர்.
இவ்வாறு இமாம் ஜாபிர் ரலி அவர்கள் ஒரு ஹதீஸுக்காக மதீனாவிலிருந்து ஒருமாதம் பயணம் செய்து சிரியா சென்றார்களாம்.

மார்க்க நூட்களை படிப்பதில் ஆர்வம்

இமாம் இப்னுல் ஜவ்ஸி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
நான் இருபதாயிரம் மார்க்கம் சம்பந்தப்பட்ட நூட்களை முழுமையாக படித்துள்ளேன் என்று கூறுகிறார்கள்.

இமாம் ஷாபிஈ ரஹ் அவர்களின் ரிஸாலா எனும் நூலை 500 தடவக்கு மேல் படித்துவிட்டதாக இமாம் முஸ்னி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

நாற்பாண்டு காலமாக நான் தூங்கும்போதும் விழிக்கும்போதும் என் நெஞ்சில் ஏதாவது கிதாப் இருக்கும் என்று ஹழ்ரத் ஹஸன் ரஹ் கூறுகிறார்கள்.

இமாம் புஹாரி ரஹ் அவர்களின் கல்வி தேட்டம்

قال الحافظ ابن كثير عن الإمام البخاري أمير المؤمنين في الحديث : ( وقد كان البخاري يستيقظ في الليلة الواحدة من نومه ، فيوقد السراج ويكتب الفائدة تمر بخاطره ، ثم يطفئ ســـراجه ، ثم يقوم مرة أخرى وأخرى ، حتى كان يتعدد منه ذلك قريباً من عشرين مرة

இமாம் புஹாரி ரஹ் அவர்கள் இரவில் எழுந்து விளக்கேற்றிவைத்து எழுத ஆரம்பித்து விடுவார்கள்.பின்பு விளக்கை அணைத்து தூங்கிவிடுவார்கள். பின்பு மீண்டும் எழுந்து எழுத ஆரம்பிப்பார்கள்.இப்படி ஒரு இரவில் இருபது தடவைக்கு மேல் தூங்கத்திலிருந்து விழிப்பார்கள் என இப்னு கஸீர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

عمرُ بن حفص الإمامَ البخاري ، فقال ( إنهم فقدوا البخاريَّ أياماً من كتابة الحديث بالبصرة ، قال: فطلبناه ، فوجدناه في بيته وهو عريان ، وقد نفد ما عنده ، ولم يبق معه شيء ، فاجتمـعـنــا وجمعنا له الدراهم حتى اشترينا له ثوباً وكسوناه ، ثم اندفع معنا في كتابة الحديث

பஸராவில் ஹதீஸ் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இமாம் புஹாரி ரஹ் அவர்களை காணவில்லை.
மக்கள் அவரை தேடி அலைந்தனர்,இறுதியில் அவரின் வீட்டில் இருப்பதாக கண்டுகொண்டனர்.மார்க்க கல்விக்காக தன் பொருள் அனைத்தையும் இழந்து உடுத்த சரியான ஆடையின்றி வீட்டில் முடங்கிப்போனார்கள்.
உடனே மக்கள் அவருக்காக ஆடை வாங்கிக்கொடுத்து மீண்டும் பணியை தொடரச்செய்தார்கள் என்று உமர் இப்னு ஹப்ஸ் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

இமாம் முஸ்லிம் ரஹ் மரணத்திற்கு காரணம் கல்வியே!

ذكر ابن حجر في تهذيب التهذيب في ترجمته عن احمد ابن سلمة زميله صاحبه ، قال ، فذُكر له حديث فلم يعرفه وهو إمام الدنيا في زمنه فرجع الي البيت وتعرفون من كان كذلك يأتيه شيء من الكآبة ، هذا الحديث من محفوظاتي فكيف ما استحظرته ، فرجع إلى البيت فجعل يفتش في كتبه عن هذا الحديث ، وأُهديت له سلة تمر في تلك الليلة فجعل يأكل من التمر ويبحث عن الحديث حتى فنيا التمر ثم وجد الحديث سلة كاملة ، قال غيرة فكان ذلك سبب موته ، يعني سلة كاملة من التمر يأكلها في ليلة ، قال غير احمد ابن سلمة فكان ذلك سبب موته ، ما شعر هو يأكل التمر ويبحث عن الحديث حتى أتى على السلة كلها فمات من اثر ذلك رحمه الله تعالى

இமாம் முஸ்லிம் ரஹ் அவர்கள் ஒருநாள் இரவுபொழுதில் ஒரு ஹதீஸின் தரம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள்.
அப்போது ஒரு கூடை நிறைய பேரித்தம் பழம் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
ஹதீஸின் கவனத்தில் ஈடுபட்டிருந்த இமாம் அவர்கள் ஒவ்வொருபழமாக எடுத்துசாப்பிட்டார்கள்.
இறுதியில் கூடையின் பழம் அனைத்தையும் தன்னிலை மறந்து சாப்பிட்ட தால் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட அன்னார் இரவிலேயே வஃபாத்தாகிவிட்டார்கள்.
மார்க்க கல்வியின் ஆர்வத்தால் இமாம் முஸ்லிம் ரஹ் அவர்கள் மரணித்து விட்டார்கள்.என இப்னு ஹஜர் ரஹ் தங்களின் தஹ்ஸீபில் கூறுகிறார்கள்.

மரணத்திலும் மார்க்க தேடல்

الإمام ابن جرير الطبري تُذكر له فائدة وهو على فراش الموت فيدعوا بالمحبرة والصحيفة ، فيُقال له يا إمام في هذا الوقت ، فيقول لا ينبغي لطالب العلم أن يدع اقتباس العلم حتى الممات

இமாம் தப்ரி ரஹ் அவர்கள் மரண தருவாயில் பேனாவும் பேப்பரும் கேட்டார்களாம்.
இமாம் அவர்களே!இந்நிலையில் இது அவசியமா?என்று மக்கள் கேட்டபோது,  கல்வியை தேடுபவனுக்கு மரணம் வரை ஓய்வில்லை என்றார்களாம்.

يقول ابن القيم أيضاً حدثنا شيخُنا ابن تيمية انه أُصيب بمرض فقال له الطبيب إن مطالعتك وقرأتك تزيد في مرضك ، قال لا استطيع ، طلب منه ان يهدى ويأخذ إجازة أياماً ، قال لا استطيع

இப்னு தைமிய்யா ரஹ் அவர்கள் நோயில் அவதிப்பட்டபோது அவர்களை பரிசோதித்த மருத்துவர், உங்களின் நோயிக்கு காரணம் உங்களின் தொடர் கிதாப் ஆராய்ச்சி தான்.எனவே சிறிது காலம் நிறுத்திவையுங்கள் என்ற போது இமாம் மறுத்துவிடுகிறார்கள்.
இமாம் அபூயூஸுஃப் ரஹ் அவர்கள் மரண தருவாயில் இருக்கிறார்கள்.  அவர்களை சந்திக்கச்சென்ற மாணவர்களிடம் ,
ஹஜ்ஜில் கல் எறிவதில் எது சிறப்பு?நடந்த நிலையிலா?வாகனித்த நிலையிலா?என கேட்டார்கள்.
மாணவர்கள், நின்ற நிலையில் என்றபோது இல்லை தவறு என்றார்கள்.  அப்படியானால் வாகனித்த நிலையில் என்றனர்.அதையும் இமாம் அவர்கள் தவறு என்றே கூறினார்கள்.
நீங்களே விடை சொல்லுங்கள் என்று மாணவர்கள் கூறியபோது,
எந்த ஜம்ராவில் கல் எறிந்துவிட்டு துஆவுக்காக நிற்பது ஜாயிஸோ அதில் நின்று கல்லெறிவது சிறப்பு(அதாவது முதல் இரண்டு ஜம்ரா)
எந்த ஜம்ராவில் கல் எறிந்துவிட்டு நிற்பது ஜாயிஸில்லையோ அதில் வாகனித்தநிலையில் கல்லெறிவது சிறப்பு என்றார்கள்(அதாவது மூன்றாவது ஜம்ரத்)
இவ்வறு நம்முடைய முன்னோர்களான இமாம்கள் தங்களின் வாழ்நாள் முழுமையாக இந்த கல்விக்காக அர்ப்பணித்தார்கள்.தங்களின் மரணத்தில் கல்வியை தேடியநிலையில் உயிர்பிரிந்தது.அல்லாஹுத்தஆலா அப்படிப்பட்ட கல்வி தாகத்தை நமக்கும் தந்தருள்வாயாக!








Thursday, 23 May 2013

இஸ்லாம் கூறுகிற இல்லறம்



மனிதன் தேடுகிற மன அமைதியை அல்லாஹு தஆலா இல்லறத்தில் அமைத்துள்ளான்.இறைவனை அடைவதற்கும்,இறையன்பை பெறுவதற்கும் குடும்பவாழ்க்கை ஒருபெரும் தடையாகவே உலகில் தோன்றிய எல்லா மதங்களும் பேசியது.
ஆண்மீகத்திற்கு திருமண வாழ்க்கை எந்தவகையிலும் சாத்தியப்படாது என்றும்,துறவரமே கடவுளை நெருங்குவதற்கான சரியான வழி யென்றும் காலம் காலமாக பேசிக்கொண்டுவந்த மதங்களுக்கு இடையில் இஸ்லாம் தோன்றியது.

திருமண உறவே அல்லாஹ்வின் அன்பை பெறுவதற்கான மிகச்சிறந்த சாதனம் எனும் புரட்சிகரமான கருத்தை முன்வைத்தது.
இஸ்லாத்தில் துறவரம் இல்லை என்று நபி ஸல் அவர்கள் பகிரங்கமாக அறிவிப்புச்செய்தார்கள்.

قال رسول الله صلى الله عليه وسلم : لا رهبانية في الاسلام.

ஆண்மீகத்தில் ஜொலிக்கநினைக்கும் ஒவ்வொருவர்களும் குடும்ப வாழ்க்கையை கடந்தாகவேண்டும்.
நிகாஹ்வுக்கும் ஈமானுக்கும் மிகநெருங்கிய தொடர்பு இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது.

திருமணம் ஈமானில் பாதி என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அவ்வாறே! உங்களில் ஒருவர் மணமுடித்துவிட்டால் ஈமானின் பாதியை பூர்த்தி செய்துவிட்டார்.மீதிவாழ்க்கையில் அல்லாஹ்வை அஞ்சி வாழ்ந்து கொள்ளட்டும் என்றும் பூமான் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஒரு முஸ்லிமின் ஈமானை உறுதிசெய்வதிலும்,முழுமைபடுத்துவதிலும் திருமணத்திற்கு முக்கிய பங்குண்டு என்பதை அழகாக கூறுகிறார்கள்.
திருமணம் செய்யாதவன் தீனில் குறையுள்ளவனே!
அவனின் வணக்கமும் கூட முழுமை அடைவதில்லை என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
அதனால்தான் உலகில் நிறைவாக வாழ்ந்தவர்களெல்லாம் நிகாஹ் செய்தே வாழ்ந்துள்ளனர்.
உலகில் உமக்கு முன்னால் பல தூதர்களை அனுப்பினோம் அவர்களுக்கு மனைவிமார்களும் மக்களும் உண்டு அல்லாஹ் கூறுகிறான்.

படைப்புக்களில் அல்லாஹ்விடம் அதிகமான நெருக்கம்பெற்ற நபிமார்கள் யாவரும் திருமணம் செய்தவர்கள் தான் என்பதை இவ்விடத்தில் கவனிக்க வேண்டும்.
மனைவி மக்களை பெறுவதும் கூட பெரும் பாக்கியமாகும்.அதனால் தான் ஹள்ரத் அலீ ரலி அவர்கள் ஐந்து அருளை பெற்றவர்கள் ஆயுளின் அனைத்து நலவுகளையும் பெற்றவராவார் என கூறினார்கள்.
1.அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் நாவு.
2.அல்லாஹ்வை நினைவு கொள்ளும் உள்ளம்.
3.துன்பங்களில் பொருமை கொள்ளும் உடல்.
4.சொந்த ஊரில் ரிஸ்க் பெற்றவர்.
5.நல்லொழுக்கமுள்ள மனைவி.
இந்த ஐந்தில் குறிப்பாக நல்லொழுக்கமுள்ள மனைவியை பெற்றவர் உலகிலேயே சுவனத்தை பெற்றவராவார்.

ஆண் பெண்ணுக்கான உறவின் தொடக்கம் சுவர்க்கமாகும்.அது முடியும் இடமும் சுவர்க்கமாகும்.
நபி ஆதம் அலை அவர்களை அல்லாஹ் படைத்து சுவனத்தில் தங்க வைத்தபோது எல்லா இன்பங்களும் அங்கு இருந்தாலும் ஒருவகையான வெருட்சியை,தனிமையை உணர்ந்தார்கள்.
அப்போது அந்த தனிமையை போக்கவே ஹவ்வா அலை அவர்களை அல்லாஹ் படைக்கிறான்.
மனைவியுடன் இரசிக்கிற போது தான் சுவனமே இன்பமாகிறது.
அல்லாஹுத்தஆலா நாளை மறுமையில் நல்லோர்கள் பற்றி குறிப்பிடும் போது
அவர்களும் அவர்களின் மனைவியர்களும் சுவனத்துக்கட்டில்களில் சாய்ந்தவர்களாக சுகம் காணுவார்கள் என்று கூறுகிறான்.
உலகில் கரம் பிடிக்கிற வாழ்க்கை துணை சுவனம் வரை தொடரக்கூடிய உண்ணதமான உறவாகும்.
ஒரு தடவை அன்னை ஆயிஷா ரலி அவர்களும் பாத்திமா ரலி அவர்களும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது பாத்திமா ரலி அவர்கள்,நாளை மறுமைநாளில் சுவனத்திற்கு அழைக்கும்போது ஒரு மனிதன் தன் பெயருடன் தன் தந்தையின் பெயர் சேர்த்தே அழைக்கப்படுவான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நாளை மறுமையில் மக்கள் முன்னிலையில் முஹம்மதின் மகள் பாத்திமாவே! என்று அழைக்கப்படும்போது அது எனக்கு எத்துனை பெரும் பாக்கியம் என்றார்கள்.
அதைகேட்ட அன்னை ஆயிஷா ரலி அவர்கள்,
நாளை சுவனத்தில் நுழையும்போது ஒவ்வொருவரும் தன் மனைவியின் கரம்பிடித்து சுவனம் செல்வார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நான் நபி ஸல் அவர்களின் கரம்பிடித்து சுவனம் நுழைவது எனக்கு எத்துனை பெரும்பாக்கியம் என்று கூறினார்களாம்.
இன்பமான இல்லறம் அமைவதற்கு என்ன வேண்டும்?
இறையச்சத்துடன் வாழ்க்கை நடத்த வேண்டும்.
நபி ஸல் அவர்கள் கலந்துகொள்கிற எந்த நிகாஹ்விலும் மணமக்களுக்  கும்,மக்களுக்கும் போதிக்கும் உபதேசங்களில் பிரதானமானவையாக இறையச்சத்தைப்பற்றிய இறைவசன்ங்கள் தான் இடம்பிடித்திருக்கும்.

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالأرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا } [النساء: 1]

ஒரு மணமகன்,அல்லது மணமகள் தேர்வுசெய்யப்படவேண்டிய அளவு கோள்களில் அழகு,வசதி,குடும்பம் இவையனைத்தையும் முன்னிலைப்படுத்தி இறையச்சத்திற்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும்.

திருமணம் என்பது இரு உறவுகள் ஒன்றுபடுவதாகும்.அங்கு பல்வேறு உரிமைகளும் கடமைகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
அல்லாஹ்வின் பயம் இல்லாதவனால் அழகான வாழ்க்கை நடத்த முடியாது.

وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ
பெண்களின் மீது கடமைகள் இருப்பதுபோல அவர்களுக்கு செய்ய  வேண்டிய உரிமைகளும் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம் அல்குர்ஆன் போதிக்கிறது.
கனவன் மனைவியின் உறவை ஒப்பிடும்போது பலவார்த்தைகளை மக்கள் பயன்படுத்துவார்கள்.
நகமும் சதையும் போல வாழவேண்டும் என்றும்,வானும் நிலவும் போல வாழவேண்டும் என்றும் கூறுவார்கள்.
ஆனால் அல்லாஹுத்தஆலா உடலும் ஆடையும் போல வாழுங்கள் என்று அழகாக ஒப்பிடுகிறான்.


هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ
அந்த பெண்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள் என்று கூறுகிறான்.
இந்த வசனத்தில் உற்றுநோக்கி கவனித்தால் ஒரு செய்தி அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது,அது என்னவெனில் நீங்களும் ஆடை தான்,அவர்களும் ஆடை தான்.இங்கு சமத்துவம் பேணப்படுகிறது.
அவர்களை விட நீங்களோ,உங்களை விட அவர்களோ உயர்ந்தவர்கள் அல்ல.மனைவியை அடக்கியாளும் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர் களுக்கு உறைக்கும்படி அல்லாஹ் கூறுகிறான்.
திருமணங்களில் ஓதப்படுகிற வசனமான சூரா நிஸாவின் முதல் வசனத்தில்,
உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்த அந்த ரப்பை பயந்துவாழுங்  கள் என்று கூறுகிறான்.
நீங்கள் இருவரும் ஒரே ஆன்மாவிலிருந்தே படைக்கப்பட்டுள்ளீர்,எனவே உங்களுக்கு இருக்கும் ஆசையும்,தேவையும் அவர்களுக்கும் இருக்கும்.   அவர்களின் உணர்வுகளுக்கும் நீங்கள் மரியாதை தரவேண்டும்.
ஆடையை கொண்டு அல்லாஹ் ஒப்பிட என்ன காரணம்?
இதற்கு விளக்கம் கூறிய முபஸ்ஸிரீன்கள் குறிப்பாக மூன்று கருத்தை முன்வைக்கின்றனர்.
முதலாவது:ஆடை மனிதனுக்கு அழகை தருகிறது.ஆடையில்லாதவன் அரைமனிதன் என்பார்கள்.
ஒருமனிதனுக்கு மரியாதையும் கண்ணியமும் மனைவியின் மூலமே கிடைக்கிறது.அதனால் தான் மனைவி இல்லாதவன் ஏழை என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அவர்கள் உங்கள் வாழ்வின் அழகு மாத்திரமல்ல,அமைதியும் அவளின் மூலமே கிடைக்கிறது.
உங்களுக்கான ஜோடிகளை உங்களின் அமைதிக்காக படைத்திருப்பதாக  அல்லாஹ் கூறுகிறான்.
இரண்டாவது:ஆடை மனிதனின் குறையை மறைக்கிறது.
ஒரு கனவன் மனைவியின் குறையை,மனைவி கனவனின் குறையை மறைத்து வாழவேண்டும்.அதாவது இவனின் துக்கமும் பலகீனமும் மனைவியுடன் மட்டுமே பரிமாறப்படவேண்டும்.
மூன்றாவது:ஆடை மனிதன் உடலுடன் அவ்வளவு நெருக்கம் பெற்றுள்ளது.
கனவன் மனைவி உடலும் ஆடையும் போல ஒருவரோடு ஒருவர் ஒட்டி வாழவேண்டும்.
திருக்குர்ஆன் விரிவுரையில் பெண்ணை ஆணின் விலா எழும்பிலிருந்து ஏன் படைத்தான் என்று விவரிக்கும்போது,
அவனின் தலை எழும்பிலிருந்து படைத்தால் அவன் மனைவியை தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடுவான்.
கால் எழும்பிலிருந்து படைத்திருந்தால் மனைவியை காலுக்கு கீழ் போட்டு மிதித்துவிடுவான்.
ஆனால் அவனின் இடது விலா எழும்போ இதயத்திற்கு நெருக்கமாக உள்ளது.எனவே அவளை இதயத்தில் வைக்கவேண்டும் என்றே அல்லாஹ் விலா எழும்பை தேர்வு செய்ததாக குறிப்பிடுவார்கள்.
அல்லாஹ் வாழுங்கள் என்று சொல்லவில்லை,
وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ
அழகாக வாழுங்கள் என்று கூறுகிறான்.ஏனெனில் நாளை மறுமையில் உங்களின் நற்குணத்தி  ற்கான சிபாரிசை உங்கள் மனைவியரிடமிருந்து மட்டுமே அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்.
உங்களில் சிறந்தவர் உங்களின் மனைவியரிடம் சிறந்தவரே என்று நபி ஸல் அவர்கள் கூறியதின் பொருளும் இதுவே.

குடும்ப வாழ்வை பொருத்தவரையில் சின்ன சின்ன விஷயங்களும் மனைவிமார்களுக்கு பெரிய மகிழ்ச்சியை வழங்கிவிடும்.

சிகப்பு ஆடை நபி ஸல் அவர்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும்,தன் மனைவி உம்முஸலமா ரலி அவர்களுக்கு பிடித்துவிட்டது என்ற என்ற காரணத்தால் அதை அடிக்கடி அணிவார்கள் என்று பார்க்கிறோம்.

எந்த கனவனும் மனைவியிடம் தன் தகுதியை அளவு கோளாக வைத்து பழகாமல் மனைவியின் தகுதியை உள்வாங்கிக்கொண்டு அவர்களுடன் பழக வேண்டும்.

தன் மனைவியின் விருப்பமான ஓட்டப்பந்தயத்திலும் அல்லாஹ்வின் தூதர் கலந்துகொண்டது இந்த பின்னனையில் தான்.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் தன் மனைவி வஃபாத்தனபோது,
நாங்கள் இருபது ஆண்டுகாலம் வாழ்ந்தோம்.எங்களிடையே கருத்துவேறு  பாடோ,சண்டையோ வந்ததில்லை என்று கூறினார்கள்.
அது எப்படி சாத்தியம் என்று ஒருவர் கேட்டபோது?
நான் கோபப்பட்டால் அதை என் மனைவி பொருந்தி கொள்வாள்.  அவள் கோபப்பட்டால் நான் பொருந்திகொள்வேன்.என்றார்கள்.
மனைவியை அன்பால் ஆள வேண்டுமே தவிர அதிகாரத்தால் அல்ல.
மனைவியிடம் தோற்பதை நான் விரும்புவேன் என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
இனிக்கும் இல்லறத்திற்கான இன்னொரு அறிவுரை:
தவறை சுட்டிக்காட்டுகிறபோது தனிமையை கடைபிடியுங்கள்.
பெரும்பாலும் இல்லறங்களில் ஏற்படுகிற பிணக்குகளுக்கு கனவன் மனைவியை தவிர்த்து மூன்றாம் கட்டமனிதர்களே கரணமாக அமைகின்றனர்.
கனவன் மனைவி பிரச்சனைகளில் மூன்றாம் மனிதர்களின் பஞ்சாயத்துக்கு இடம் கொடுக்காதீர்கள்.
فَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرً
மனைவியிடம் உங்களுக்கு பிடிக்காத ஒரு குணம் இருந்தால் பிடித்த 99 குணங்கள் இருக்கலாம்,அதைபற்றி உங்களின் கவனத்தை திருப்புங்கள் என அல்லாஹ் அறிவுரை கூறுகிறான்.
இஸ்லாம் கூறுகிற இல்லறத்தை கடைப்பிடிப்போமாக...