Thursday 23 May 2013

இஸ்லாம் கூறுகிற இல்லறம்



மனிதன் தேடுகிற மன அமைதியை அல்லாஹு தஆலா இல்லறத்தில் அமைத்துள்ளான்.இறைவனை அடைவதற்கும்,இறையன்பை பெறுவதற்கும் குடும்பவாழ்க்கை ஒருபெரும் தடையாகவே உலகில் தோன்றிய எல்லா மதங்களும் பேசியது.
ஆண்மீகத்திற்கு திருமண வாழ்க்கை எந்தவகையிலும் சாத்தியப்படாது என்றும்,துறவரமே கடவுளை நெருங்குவதற்கான சரியான வழி யென்றும் காலம் காலமாக பேசிக்கொண்டுவந்த மதங்களுக்கு இடையில் இஸ்லாம் தோன்றியது.

திருமண உறவே அல்லாஹ்வின் அன்பை பெறுவதற்கான மிகச்சிறந்த சாதனம் எனும் புரட்சிகரமான கருத்தை முன்வைத்தது.
இஸ்லாத்தில் துறவரம் இல்லை என்று நபி ஸல் அவர்கள் பகிரங்கமாக அறிவிப்புச்செய்தார்கள்.

قال رسول الله صلى الله عليه وسلم : لا رهبانية في الاسلام.

ஆண்மீகத்தில் ஜொலிக்கநினைக்கும் ஒவ்வொருவர்களும் குடும்ப வாழ்க்கையை கடந்தாகவேண்டும்.
நிகாஹ்வுக்கும் ஈமானுக்கும் மிகநெருங்கிய தொடர்பு இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது.

திருமணம் ஈமானில் பாதி என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அவ்வாறே! உங்களில் ஒருவர் மணமுடித்துவிட்டால் ஈமானின் பாதியை பூர்த்தி செய்துவிட்டார்.மீதிவாழ்க்கையில் அல்லாஹ்வை அஞ்சி வாழ்ந்து கொள்ளட்டும் என்றும் பூமான் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஒரு முஸ்லிமின் ஈமானை உறுதிசெய்வதிலும்,முழுமைபடுத்துவதிலும் திருமணத்திற்கு முக்கிய பங்குண்டு என்பதை அழகாக கூறுகிறார்கள்.
திருமணம் செய்யாதவன் தீனில் குறையுள்ளவனே!
அவனின் வணக்கமும் கூட முழுமை அடைவதில்லை என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
அதனால்தான் உலகில் நிறைவாக வாழ்ந்தவர்களெல்லாம் நிகாஹ் செய்தே வாழ்ந்துள்ளனர்.
உலகில் உமக்கு முன்னால் பல தூதர்களை அனுப்பினோம் அவர்களுக்கு மனைவிமார்களும் மக்களும் உண்டு அல்லாஹ் கூறுகிறான்.

படைப்புக்களில் அல்லாஹ்விடம் அதிகமான நெருக்கம்பெற்ற நபிமார்கள் யாவரும் திருமணம் செய்தவர்கள் தான் என்பதை இவ்விடத்தில் கவனிக்க வேண்டும்.
மனைவி மக்களை பெறுவதும் கூட பெரும் பாக்கியமாகும்.அதனால் தான் ஹள்ரத் அலீ ரலி அவர்கள் ஐந்து அருளை பெற்றவர்கள் ஆயுளின் அனைத்து நலவுகளையும் பெற்றவராவார் என கூறினார்கள்.
1.அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் நாவு.
2.அல்லாஹ்வை நினைவு கொள்ளும் உள்ளம்.
3.துன்பங்களில் பொருமை கொள்ளும் உடல்.
4.சொந்த ஊரில் ரிஸ்க் பெற்றவர்.
5.நல்லொழுக்கமுள்ள மனைவி.
இந்த ஐந்தில் குறிப்பாக நல்லொழுக்கமுள்ள மனைவியை பெற்றவர் உலகிலேயே சுவனத்தை பெற்றவராவார்.

ஆண் பெண்ணுக்கான உறவின் தொடக்கம் சுவர்க்கமாகும்.அது முடியும் இடமும் சுவர்க்கமாகும்.
நபி ஆதம் அலை அவர்களை அல்லாஹ் படைத்து சுவனத்தில் தங்க வைத்தபோது எல்லா இன்பங்களும் அங்கு இருந்தாலும் ஒருவகையான வெருட்சியை,தனிமையை உணர்ந்தார்கள்.
அப்போது அந்த தனிமையை போக்கவே ஹவ்வா அலை அவர்களை அல்லாஹ் படைக்கிறான்.
மனைவியுடன் இரசிக்கிற போது தான் சுவனமே இன்பமாகிறது.
அல்லாஹுத்தஆலா நாளை மறுமையில் நல்லோர்கள் பற்றி குறிப்பிடும் போது
அவர்களும் அவர்களின் மனைவியர்களும் சுவனத்துக்கட்டில்களில் சாய்ந்தவர்களாக சுகம் காணுவார்கள் என்று கூறுகிறான்.
உலகில் கரம் பிடிக்கிற வாழ்க்கை துணை சுவனம் வரை தொடரக்கூடிய உண்ணதமான உறவாகும்.
ஒரு தடவை அன்னை ஆயிஷா ரலி அவர்களும் பாத்திமா ரலி அவர்களும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது பாத்திமா ரலி அவர்கள்,நாளை மறுமைநாளில் சுவனத்திற்கு அழைக்கும்போது ஒரு மனிதன் தன் பெயருடன் தன் தந்தையின் பெயர் சேர்த்தே அழைக்கப்படுவான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நாளை மறுமையில் மக்கள் முன்னிலையில் முஹம்மதின் மகள் பாத்திமாவே! என்று அழைக்கப்படும்போது அது எனக்கு எத்துனை பெரும் பாக்கியம் என்றார்கள்.
அதைகேட்ட அன்னை ஆயிஷா ரலி அவர்கள்,
நாளை சுவனத்தில் நுழையும்போது ஒவ்வொருவரும் தன் மனைவியின் கரம்பிடித்து சுவனம் செல்வார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நான் நபி ஸல் அவர்களின் கரம்பிடித்து சுவனம் நுழைவது எனக்கு எத்துனை பெரும்பாக்கியம் என்று கூறினார்களாம்.
இன்பமான இல்லறம் அமைவதற்கு என்ன வேண்டும்?
இறையச்சத்துடன் வாழ்க்கை நடத்த வேண்டும்.
நபி ஸல் அவர்கள் கலந்துகொள்கிற எந்த நிகாஹ்விலும் மணமக்களுக்  கும்,மக்களுக்கும் போதிக்கும் உபதேசங்களில் பிரதானமானவையாக இறையச்சத்தைப்பற்றிய இறைவசன்ங்கள் தான் இடம்பிடித்திருக்கும்.

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالأرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا } [النساء: 1]

ஒரு மணமகன்,அல்லது மணமகள் தேர்வுசெய்யப்படவேண்டிய அளவு கோள்களில் அழகு,வசதி,குடும்பம் இவையனைத்தையும் முன்னிலைப்படுத்தி இறையச்சத்திற்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும்.

திருமணம் என்பது இரு உறவுகள் ஒன்றுபடுவதாகும்.அங்கு பல்வேறு உரிமைகளும் கடமைகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
அல்லாஹ்வின் பயம் இல்லாதவனால் அழகான வாழ்க்கை நடத்த முடியாது.

وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ
பெண்களின் மீது கடமைகள் இருப்பதுபோல அவர்களுக்கு செய்ய  வேண்டிய உரிமைகளும் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம் அல்குர்ஆன் போதிக்கிறது.
கனவன் மனைவியின் உறவை ஒப்பிடும்போது பலவார்த்தைகளை மக்கள் பயன்படுத்துவார்கள்.
நகமும் சதையும் போல வாழவேண்டும் என்றும்,வானும் நிலவும் போல வாழவேண்டும் என்றும் கூறுவார்கள்.
ஆனால் அல்லாஹுத்தஆலா உடலும் ஆடையும் போல வாழுங்கள் என்று அழகாக ஒப்பிடுகிறான்.


هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ
அந்த பெண்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள் என்று கூறுகிறான்.
இந்த வசனத்தில் உற்றுநோக்கி கவனித்தால் ஒரு செய்தி அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது,அது என்னவெனில் நீங்களும் ஆடை தான்,அவர்களும் ஆடை தான்.இங்கு சமத்துவம் பேணப்படுகிறது.
அவர்களை விட நீங்களோ,உங்களை விட அவர்களோ உயர்ந்தவர்கள் அல்ல.மனைவியை அடக்கியாளும் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர் களுக்கு உறைக்கும்படி அல்லாஹ் கூறுகிறான்.
திருமணங்களில் ஓதப்படுகிற வசனமான சூரா நிஸாவின் முதல் வசனத்தில்,
உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்த அந்த ரப்பை பயந்துவாழுங்  கள் என்று கூறுகிறான்.
நீங்கள் இருவரும் ஒரே ஆன்மாவிலிருந்தே படைக்கப்பட்டுள்ளீர்,எனவே உங்களுக்கு இருக்கும் ஆசையும்,தேவையும் அவர்களுக்கும் இருக்கும்.   அவர்களின் உணர்வுகளுக்கும் நீங்கள் மரியாதை தரவேண்டும்.
ஆடையை கொண்டு அல்லாஹ் ஒப்பிட என்ன காரணம்?
இதற்கு விளக்கம் கூறிய முபஸ்ஸிரீன்கள் குறிப்பாக மூன்று கருத்தை முன்வைக்கின்றனர்.
முதலாவது:ஆடை மனிதனுக்கு அழகை தருகிறது.ஆடையில்லாதவன் அரைமனிதன் என்பார்கள்.
ஒருமனிதனுக்கு மரியாதையும் கண்ணியமும் மனைவியின் மூலமே கிடைக்கிறது.அதனால் தான் மனைவி இல்லாதவன் ஏழை என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அவர்கள் உங்கள் வாழ்வின் அழகு மாத்திரமல்ல,அமைதியும் அவளின் மூலமே கிடைக்கிறது.
உங்களுக்கான ஜோடிகளை உங்களின் அமைதிக்காக படைத்திருப்பதாக  அல்லாஹ் கூறுகிறான்.
இரண்டாவது:ஆடை மனிதனின் குறையை மறைக்கிறது.
ஒரு கனவன் மனைவியின் குறையை,மனைவி கனவனின் குறையை மறைத்து வாழவேண்டும்.அதாவது இவனின் துக்கமும் பலகீனமும் மனைவியுடன் மட்டுமே பரிமாறப்படவேண்டும்.
மூன்றாவது:ஆடை மனிதன் உடலுடன் அவ்வளவு நெருக்கம் பெற்றுள்ளது.
கனவன் மனைவி உடலும் ஆடையும் போல ஒருவரோடு ஒருவர் ஒட்டி வாழவேண்டும்.
திருக்குர்ஆன் விரிவுரையில் பெண்ணை ஆணின் விலா எழும்பிலிருந்து ஏன் படைத்தான் என்று விவரிக்கும்போது,
அவனின் தலை எழும்பிலிருந்து படைத்தால் அவன் மனைவியை தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடுவான்.
கால் எழும்பிலிருந்து படைத்திருந்தால் மனைவியை காலுக்கு கீழ் போட்டு மிதித்துவிடுவான்.
ஆனால் அவனின் இடது விலா எழும்போ இதயத்திற்கு நெருக்கமாக உள்ளது.எனவே அவளை இதயத்தில் வைக்கவேண்டும் என்றே அல்லாஹ் விலா எழும்பை தேர்வு செய்ததாக குறிப்பிடுவார்கள்.
அல்லாஹ் வாழுங்கள் என்று சொல்லவில்லை,
وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ
அழகாக வாழுங்கள் என்று கூறுகிறான்.ஏனெனில் நாளை மறுமையில் உங்களின் நற்குணத்தி  ற்கான சிபாரிசை உங்கள் மனைவியரிடமிருந்து மட்டுமே அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்.
உங்களில் சிறந்தவர் உங்களின் மனைவியரிடம் சிறந்தவரே என்று நபி ஸல் அவர்கள் கூறியதின் பொருளும் இதுவே.

குடும்ப வாழ்வை பொருத்தவரையில் சின்ன சின்ன விஷயங்களும் மனைவிமார்களுக்கு பெரிய மகிழ்ச்சியை வழங்கிவிடும்.

சிகப்பு ஆடை நபி ஸல் அவர்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும்,தன் மனைவி உம்முஸலமா ரலி அவர்களுக்கு பிடித்துவிட்டது என்ற என்ற காரணத்தால் அதை அடிக்கடி அணிவார்கள் என்று பார்க்கிறோம்.

எந்த கனவனும் மனைவியிடம் தன் தகுதியை அளவு கோளாக வைத்து பழகாமல் மனைவியின் தகுதியை உள்வாங்கிக்கொண்டு அவர்களுடன் பழக வேண்டும்.

தன் மனைவியின் விருப்பமான ஓட்டப்பந்தயத்திலும் அல்லாஹ்வின் தூதர் கலந்துகொண்டது இந்த பின்னனையில் தான்.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் தன் மனைவி வஃபாத்தனபோது,
நாங்கள் இருபது ஆண்டுகாலம் வாழ்ந்தோம்.எங்களிடையே கருத்துவேறு  பாடோ,சண்டையோ வந்ததில்லை என்று கூறினார்கள்.
அது எப்படி சாத்தியம் என்று ஒருவர் கேட்டபோது?
நான் கோபப்பட்டால் அதை என் மனைவி பொருந்தி கொள்வாள்.  அவள் கோபப்பட்டால் நான் பொருந்திகொள்வேன்.என்றார்கள்.
மனைவியை அன்பால் ஆள வேண்டுமே தவிர அதிகாரத்தால் அல்ல.
மனைவியிடம் தோற்பதை நான் விரும்புவேன் என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
இனிக்கும் இல்லறத்திற்கான இன்னொரு அறிவுரை:
தவறை சுட்டிக்காட்டுகிறபோது தனிமையை கடைபிடியுங்கள்.
பெரும்பாலும் இல்லறங்களில் ஏற்படுகிற பிணக்குகளுக்கு கனவன் மனைவியை தவிர்த்து மூன்றாம் கட்டமனிதர்களே கரணமாக அமைகின்றனர்.
கனவன் மனைவி பிரச்சனைகளில் மூன்றாம் மனிதர்களின் பஞ்சாயத்துக்கு இடம் கொடுக்காதீர்கள்.
فَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرً
மனைவியிடம் உங்களுக்கு பிடிக்காத ஒரு குணம் இருந்தால் பிடித்த 99 குணங்கள் இருக்கலாம்,அதைபற்றி உங்களின் கவனத்தை திருப்புங்கள் என அல்லாஹ் அறிவுரை கூறுகிறான்.
இஸ்லாம் கூறுகிற இல்லறத்தை கடைப்பிடிப்போமாக...






5 comments: