Thursday, 5 December 2013

உள்ளத்தால் ஒன்றுபடுவோம்.
















இன்றைய நவீன முஸ்லிம் சமூகத்தில் இல்லாத பல பண்பாடுகளில் ஒன்று சமூக ஒற்றுமை என்பது. உலக அளவிலோ, தேச அளவிலோ மட்டுமல்ல , குறைந்த பட்சம் கிராம அளவில் கூட , ஏன் ஒரு மஹல்லா அளவில் கூட இது கானல் நீராக இருக்கிறது.

முஸ்லிம் சமுகத்திற்கு பிற சமுகமல்ல, பெரும்பாலும் முஸ்லிம் சமூகமே இன்றைக்கு எதிரியாக இருக்கிறது. ஒரு முஸ்லிம் சமூகம் எதிரிகளால் தாக்கப்படும்போது எதிரிகளுக்கு உதவியாக இருப்பதும்கூட இன்னொரு முஸ்லிம் சமூகமே.

அது போல்   ஒரு முஸ்லிம் நாடு சிரமப்படுவதை பார்த்து இன்னொரு இஸ்லாமிய நாடு கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது இன்றைய சூழ்நிலையில் அதிகமாகி கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி . எந்த பூமியில் நம்முடைய உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் பாதம் பட்டதோ அத்தகைய பூமியான சிரியாவில் நடைபெற்றுவரும் அவலம்
.
அங்குள்ள இஸ்லாமியர்கள் சாப்பிட எதுவும் இன்றி பல நாட்கள் பசியோடு இருப்பதால் இப்போது அங்கு இருக்கும் உலமாக்களால் இப்படி ஒரு ஃபத்வா கொடுக்கப்பட்டிருக்கிறது. சிரியா மக்கள் நாய். குரங்கு கறிகளை சாப்பிடலாம் அவர்கள் நிர்பந்திக்கப்பட்டவர்கள் என்று..  அவர்கள் வேறுவழியில்லாமல் அதைத்தான் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.
  
இது எத்துனை வேதனையான செய்தி இதனை கண்டுகொள்ளாமல் இன்னொரு பக்கம் உலகில் எந்த மூளையில் என்ன அறிமுகமானாலும் அதை என்ன விலை கொடுத்தும் வாங்கி வாழ்க்கையை ரசித்து கொண்டிருக்கும் இஸ்லாமிய நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
ஏன் இந்த நிலை இஸ்லாம் கற்றுதரும் வழி இதுவா.

இஸ்லாம் வளர்ந்தது. உலக மக்களை தன் பக்கம் கவர்ந்தது இஸ்லாத்தின் தனித்தன்மையில் ஒன்றான சகோதரத்துவம். ஒற்றுமையினால்தான்

அதனால்தான் நாயகம் (ஸல்) அவர்கள்மக்காவிலிருந்து இடம் பெயர்ந்து மதீனா வந்தவுடன் அங்கே ஓர் இஸ்லாமிய எழுச்சிக்கான அடித்தளம் அமைத்தபோது இரண்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்தார்கள்
.
ஒன்று - மனிதர்களுக்கிடையில் சகோதரத்துவம்.
இரண்டு - சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை

பரம்பரை பரம்பரையாக பகைமை பாராட்டிக் கொண்டிருந்த அவ்ஸ்-கஸ்ரஜ் கோத்திரங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள். காலாகாலமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை சகோதரர்களாக மாற்றிக் காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய சகோதரத்துவம் வரலாற்றிலே பொன் வரிகளால் பொறித்துக் காண்பிக்கப்பட வேண்டியது.

 ஏனெனில், ஒழுங்கை அறியாத கோத்திர உணர்வு மேலோங்கியிருந்த அரேபிய சமூகத்தில் அன்பையும் கருணையையும் பரஸ்பரம் உதவிபுரியும் பண்பையும் இஸ்லாமிய சகோதரத்துவக் கொள்கைமூலம் வளர்த்தார்கள். இரத்த உறவு ரீதியான சகோதரத்துவம் கூட வலுவிழந்து போகும் அளவிற்கு இஸ்லாம் கூறும் கொள்கை சகோதரத்துவம் பாரிய மாற்றங்களைஅரேபியரிடையே ஏற்படுத்தியது
.
இவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்; நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (மார்க்கத்தினை) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; (உங்களுக்குள் கருத்துவேறு பட்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம்; மேலும் உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் விரோதிகளாக இருந்த சமயத்தில் அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப் பிணைப்பினை உண்டாக்கினான். ஆகவே அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்) நீங்கள் நரக நெருப்புக் குழியின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களை ஈடேரச் செய்தான். (3:103)

அதேபோன்று பிற்பட்ட கால முஸ்லிம்களின் வரலாறுகளைப் புரட்டிப் பார்க்கின்றபோது இஸ்லாமிய எழுச்சிக்கு இச்சகோதரத்துவக் கொள்கையும் காரணமாக அமைந்திருப்பதனைக் கண்டு கொள்ளலாம். வரலாற்றாசிரியர் ஏ. சுவாமி நாதன் என்பவர் தனது இந்திய வரலாறு எனும் நூலில் குறிப்பி டும்போது இஸ்லாம் சமயத்தின் வளர்ச்சிக்குப் பல காரணங்கள் உண்டு. சகோதரத்துவம், சமத்துவம், என்ற கொள்கைகளின் மூலம் சமுதாயத்தில் தாழ்வுற்றிருந்த இந்துக்களைக் கவர்ந்தனர்;

பிராமணத்தின் ஆதிக்கத்தில் அல்லல்பட்டிருந்த தீண்டத்தகாதவர்கள் என் போர் இக் கொள்கைமீது பற்று கொண்டு இஸ்லாம் சமயத்தை தழுவினர். இந்து சமயத்தின் வளர்ச்சியில் தடு மாற்றம் ஏற்பட்டு அது தரைமட்டமாகிவிடுமோ என்று பெரும் சமயத் தலைவர்கள் (பக்கம்: 19)அஞ்சும் அளவிற்கு இக்கொள்கை யினால் மாற்றம் ஏற்பட்டதாக அவர் கூறுகின்றார்.

பெருமானார்(ஸல்) அவர்கள் மதீனாவில் ஏற்படுத்திய சகோதரத்துவத்தின் தாக்கம் எந்தளவிற்கு ஸஹாபாக்களிடம் வெளிப்பட்டது என்பதை பார்க்கும்போது நாம் வியப்பின் உச்சிக்கே போய்விடுவோம்.

 அவர்கள் வெளிப்படுத்திய சகோதரத்துவத்தைக் கண்டு அல்லாஹ்வே ஆச்சரியப்பட்டான்.

عن أبي هُرَيرة قال: أتى رجل رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، أصابني الجهدُ، فأرسل إلى نسائه فلم يجد عندهن شيئًا، فقال النبي صلى الله عليه وسلم: "ألا رجل يُضَيّفُ هذا الليلة، رحمه الله؟". فقام رجل من الأنصار فقال: أنا يا رسول الله. فذهب إلى أهله فقال لامرأته: ضَيفُ رسول الله صلى الله عليه وسلم لا تَدّخريه شيئًا. فقالت: والله ما عندي إلا قوتُ الصبية. قال: فإذا أراد الصبيةُ العَشَاء فنوّميهم وتعالى فأطفئي السراج ونَطوي بطوننا الليلة. ففعلَت، ثم غدا الرجل على رسول الله صلى الله عليه وسلم، فقال: "لقد عجب الله، عز وجل -أو: ضحك-من فلان وفلانة". وأنزل الله عز وجل: { وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ }

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காக) தமது மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், “எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை என்று பதிலளித்தனர்.

ஆகவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இவரை சேர்த்துக் கொள்பவர் யார்?” அல்லது இவருக்கு விருந்தளிப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “நான் (விருந்தளிக்கின்றேன்)என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு தமது மனைவியிடம் சென்றார்.

அல்லாஹ்வின் தூதருடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து என்று (தம் மனைவியிடம்) கூறினார். அதற்கு அவருடைய மனைவி, “நம்மிடம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவும் இல்லை என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், “உன் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு என்று கூறினார்.
அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று விளக்கை அணைத்து விட்டார்.

பிறகு (இருக்கும் உணவை விருந்தாளியை உண்ணச் செய்து விட்டு) அவரும் அவரது மனைவியும் உண்பது போல் அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர்.

காலையானதும் அந்த அன்சாரித் தோழர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு சிரித்துக் கொண்டான் அல்லது வியப்படைந்தான் என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், “தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (பிறருக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர் எனும் (59:9) வசனத்தை அருளினான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,

நூல்: புகாரி 3798

அல்லாஹ்வை ஆச்சரியப்பட வைத்த சிரிக்க வைத்த அந்த தம்பதிகள் அபூதல்ஹா (ரலி. உம்மு சுலைம்(ரலி) அவர்கள்தான் என்று தப்ஸீர் துர்ருல் மன்ஸூரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன் மனைவியைக் கூட இழக்க முன் வந்தார்கள்.

عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ
لَمَّا قَدِمُوا الْمَدِينَةَ آخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَسَعْدِ بْنِ الرَّبِيعِ قَالَ لِعَبْدِ الرَّحْمَنِ إِنِّي أَكْثَرُ الْأَنْصَارِ مَالًا فَأَقْسِمُ مَالِي نِصْفَيْنِ وَلِي امْرَأَتَانِ فَانْظُرْ أَعْجَبَهُمَا إِلَيْكَ فَسَمِّهَا لِي أُطَلِّقْهَا فَإِذَا انْقَضَتْ عِدَّتُهَا فَتَزَوَّجْهَا قَالَ بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ

2048. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவிக்கிறார்கள்..
முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) 'நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன் எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன்
.
 என்னுடைய இரண்டு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரின் இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!" என்று கூறினார். அப்போது நான், 'இது எனக்குத் தேவையில்லை! வியாபாரம் நடைபெறுகிற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?' எனக் கேட்டேன்.
.
நினைத்து பார்க்க முடியாத மன்னிப்பு.

عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ
لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُونَ فَصَرَخَ إِبْلِيسُ لَعْنَةُ اللَّهِ عَلَيْهِ أَيْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ فَرَجَعَتْ أُولَاهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ فَبَصُرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ الْيَمَانِ فَقَالَ أَيْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي قَالَ قَالَتْ فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ فَقَالَ حُذَيْفَةُ يَغْفِرُ اللَّهُ لَكُمْ قَالَ عُرْوَةُ فَوَاللَّهِ مَا زَالَتْ فِي حُذَيْفَةَ بَقِيَّةُ خَيْرٍ حَتَّى لَحِقَ بِاللَّهِ عَزَّ وَجَلَّ
  
உஹுதுப் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ், அல்லாஹ் அவனைக் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! 'அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்" என்று கத்தினான்.

 உடனே, முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின் அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் (மோதலேற்பட்டுப்) போரிட்டுக் கொண்டனர். அப்போது ஹுதைஃபா(ரலி), தம் தந்தை யமான் அவர்கள் அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். எனவே, 'அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!" என்று (உரக்கக்) கூவினார்கள்
.
 (ஆனால்) அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டும்) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா(ரலி) (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), 'அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!" என்று கூறினார்கள்
.
அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா(ரஹ்) கூறினார்.
அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா(ரலி) (இவ்வாறு மன்னித்தால் அவர்கள்) அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை அவர்களிடம் நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது
    
நூல்: புகாரி. 4065.

மரண நேரத்திலும் மனித நேயம்

யர்முக் போரில் படுகாயமுற்று மரணத் தறுவாயில் தண்ணீர் தண்ணீர் என்று குரல் கொடுத்த தோழருக்கு தண்ணீருடன் நெருங்கியபோது மற்றொரு தோழருடைய குரல்கேட்டு அவருக்கு கொடுங்கள் என்று கூறி மரணத் தறுவாயில் கூட மற்றவரின் தேவைக்கு முன்னுரிமை கொடுத்த நபித்தோழர்கள்களின்சம்பவத்தைவும் பார்க்க முடிகிறது

இப்படி சகோதரத்துவத்தோடு வாழ்ந்த அவர்களிடமும் கருத்து வேற்றுமை இருக்கத்தான் செய்தது ஆனால் அது மிகப்பெரும்  பிரச்சனையாக ஆகவில்லை.

அதற்கு இரண்டு காரணத்தை சொல்லலாம்.

முதலாவதுகாரணம். குர் ஆன் ஹதீஸ் அவர்களுக்கு நினைவு படுத்தினால் கருத்து வேற்றுமையை மறந்து விடுவார்கள்

இரண்டாவது காரணம். அவர்களிடம் கருத்து வேற்றுமை உதட்டளவில்தான் இருந்தது, உள்ளத்தில் வேற்றுமையை வைக்கவில்லை

நபியின் மரணத்தில் கருத்து வேறுபாடு.

وَقَالَ عُمَرُ وَاللَّهِ مَا كَانَ يَقَعُ فِي نَفْسِي إِلَّا ذَاكَ وَلَيَبْعَثَنَّهُ اللَّهُ فَلَيَقْطَعَنَّ أَيْدِيَ رِجَالٍ وَأَرْجُلَهُمْ فَجَاءَ أَبُو بَكْرٍ فَكَشَفَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَبَّلَهُ قَالَ بِأَبِي أَنْتَ وَأُمِّي طِبْتَ حَيًّا وَمَيِّتًا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يُذِيقُكَ اللَّهُ الْمَوْتَتَيْنِ أَبَدًا ثُمَّ خَرَجَ فَقَالَ أَيُّهَا الْحَالِفُ عَلَى رِسْلِكَ فَلَمَّا تَكَلَّمَ أَبُو بَكْرٍ جَلَسَ عُمَرُ فَحَمِدَ اللَّهَ أَبُو بَكْرٍ وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ أَلَا مَنْ كَانَ يَعْبُدُ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ وَمَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ فَإِنَّ اللَّهَ حَيٌّ لَا يَمُوتُ وَقَالَ
{ إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ }
وَقَالَ
{ وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ }

1)   நபி(ஸல்)அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினார்.

 உமர்(ரலி) உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) மீண்டும் மறுக்கவே அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் உமர்(ரலி) பக்கமிருந்து அபூ பக்ர்(ரலி) பக்கம் திரும்பிவிட்டனர்
.
 அப்போது அபூ பக்ர்(ரலி) 'உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்: முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்" (திருக்குர்ஆன் 3:144) என்றார்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள்.

   நபி (ஸல்) அவர்கள் மரணித்தபோது அவர்களை எங்கே அடக்கம்

2)   நபி (ஸல்) அவர்கள் மரணித்தபோது அவர்களை எங்கே அடக்கம் செய்வது என்று ஸஹாபாக்கள் கருத்து வேறுபாடு கொண்டபோது நபிமார்கள் மரணித்த இடத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற ஹதீஸை அபூபக்கர் (ரலி) நினைவு படுத்தினார்கள். உடனே ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் மரணித்த இடமான ஆயிஷா (ரலி) அவர்களுடைய வீட்டுக்குள்ளேயே குழிதோன்றி நல்லடக்கம் செய்தார்கள்

  குளிப்பு விஷயத்தில்.

3). உடல் உறவில் ஈடுபட்டு விந்து வெளிப்படாவிட்டால், குளிக்க வேண்டியதில்லை என ஆரம்பத்திலும், பின்னர் குளிக்க வேண்டும் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். குளிக்க வேண்டியதில்லை என்ற சட்டம் மாற்றப்பட்டதை அறியாத உமர்(ரலி) போன்றோர் இந்நிலையில் குளிக்க வேண்டியதில்லை என்ற அடிப்படையில் செயல்பட்டு வந்தனர். பின்னர் இது குறித்த சர்ச்சை எழுந்தபோது, ஆயிஷா(ரலி) அவர்களிடம் விசாரித்து குளிக்கத் தேவையில்லை என்ற சட்டம் மாற்றப்பட்டு விட்டதை அறிந்து தமது கருத்தை மாற்றிக் கொண்டார்கள்

எவ்வளவு ஆச்சரியமான வரலாறுக்கு சொந்தக்காரர்கள். அது அவர்களோடு நின்று விடவில்லை அது அடுத்த நூற்றாண்டிலும் தொடர்ந்தது.

1)      இமாம் மாலிக் (ரஹ்) அவர்களைச் சந்திக்க எகிப்திலிருந்து ஒரு அறிஞர் வந்திருந்தார். அப்போது இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தங்களது நெற்றியில் வழிந்தோடும் வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள்.
அதைப் பார்த்த அவ்வறிஞர், “ஏன் உங்களுக்கு இவ்வாறு வியர்த்து வழிகின்றது?” என்று கேட்டார். அதற்கு மாலிக் (ரஹ்) அவர்கள், “நான் இமாம் அபூஹனீஃபா  (ரஹ்) அவர்களுடன் பல விடயங்கள் குறித்து விவாதம் செய்து விட்டு வருகிறேன்என்று கூறிவிட்டு, “அவர் உண்மையிலேயே ஒரு நல்ல மார்க்க அறிஞர்தான்!என்று அவரைப் பாராட்டினார்.

2)      இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களைப் பற்றிக் கூறுகிறார்கள் அறிஞர்களில் நட்சத்திரம் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்.

3)      இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களைப் பற்றி இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்:ஃபிக்ஹு சட்டங்களின் தெளிவு வேண்டும் என்றால் இமாம்     அபூஹனீஃபாதான் மக்களுக்கு உதவ முடியும்..

4)      இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களிடம் அவருடைய மகன் அப்துல்லாஹ் வினவினார்: தங்கள் பிரார்த்தனையில் எப்போதும் ஷாஃபி (ரஹ்) அவர்களையும் சேர்த்துக்கொள்கிறீர்களே... யார் அந்த ஷாஃபி?”

இமாம் அஹமது (ரஹ்) அவர்கள் கூறினார்கள். மகனே ஷாஃபி இமாம் அவர்கள் முஸ்லிம் உலகிற்கு சூரியனாகவும், மக்களுக்கு நன்மையின் பிதாவாகவும் வாழ்ந்தவர்கள்.

இப்பேர்ப்பட்ட பரிசுத்தமானவர்களை முன்னோடிகளாக கொண்ட நாம் ஏன் இத்தனை பிரிவுகளாக பிரிந்திருக்கிறோம் நம்முடைய உள்ளத்தில் இஸ்லாமிய சகோதரர்கள்மீது எத்துணை காழ்புணர்ச்சி போட்டி பொறாமை நீங்க வழிகான வேண்டாமா

அவ்வாறு இல்லையென்றால்..அல்லாஹ்வுடைய உதவி எக்காலமும் கிடைக்காது. மென்மேலும் பல சிரமங்களைத்தான் சந்திக்க வேண்டிய நிலைஏற்படும். என்பதைபாக்கியம் நிறைந்த லைலத்துல் கத்ருடைய இரவு நமக்கு உணர்த்துகிறது.

حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ أَخْبَرَنِي عُبَادَةُ بْنُ الصَّامِتِ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يُخْبِرُ بِلَيْلَةِ الْقَدْرِ فَتَلَاحَى رَجُلَانِ مِنْ الْمُسْلِمِينَ فَقَالَ إِنِّي خَرَجْتُ لِأُخْبِرَكُمْ بِلَيْلَةِ الْقَدْرِ وَإِنَّهُ تَلَاحَى فُلَانٌ وَفُلَانٌ فَرُفِعَتْ وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمْ الْتَمِسُوهَا فِي السَّبْعِ وَالتِّسْعِ وَالْخَمْسِ

 நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற் காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்க ளில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெறமுயற்சி செய்யுங்கள்'' என்றார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),

 நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)

பாக்கியமான அந்த இரவு நம்மைவிட்டும் மறைந்ததற்கு காரணம் இரண்டு பேரிடம் ஏற்பட்ட சண்டைதான் என்பதை இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது. இரண்டு பேரிடம் ஏற்பட்ட சண்டையின் விளைவே இப்படி என்றால் ஒட்டுமொத்த சமூகமும் மோதிகொண்டால் நிலை என்னாகும்.

அதனால் நாயகம்(ஸல்) அவர்கள் சகோதரத்துவம் ஏற்பட மிக இலகுவான வழியை கற்றுகொடுத்தார்கள்.

1. வரிசையை சரிசெய்வது

عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلَاةِ وَيَقُولُ اسْتَوُوا وَلَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ لِيَلِنِي مِنْكُمْ أُولُو الْأَحْلَامِ وَالنُّهَى ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ  قَالَ أَبُو مَسْعُودٍ فَأَنْتُمْ الْيَوْمَ أَشَدُّ اخْتِلَافًا

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"உங்களின் வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் கருத்து வேற்றுமையை ஏற்படுத்திவிடுவான்."
என இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
நூல்: புகாரி

2. முஸாபஹா செய்வது

عن الحسن ، قال : « المصافحة تزيد في المودة
 முஸாபஹா செய்யுங்கள் பிரியம் அதிகமாகும் என ஹஸன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
3 ஸலாம் சொல்வது

قال رسول الله صلى الله عليه وسلم : " لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أو لا أدلكم على شيء إذا فعلمتموه تحاببتم ؟ أفشوا السلام بينكم " رواه مسلم

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.நீங்கள் முஃமினாக ஆகாதவரை சொர்க்கம் போகமுடியாது. உங்களுங்கிடையில் பிரியம் கொள்ளாதவரை முஃமினாக ஆகமுடியாது. (எனவே) உங்களுக்கிடையில் அன்பை ஏற்படுத்தும் விஷயத்தை சொல்லவா என்று கேட்டுவிட்டு நாயகம்(ஸல்) கூறினார்கள். உங்களுக்கிடையில் ஸலாமை பரப்புங்கள்.

நூல் ;முஸ்லிம்.

இறுதியாக..     அல்லாஹ் தன் திருமறையில் ஒரு அத்தியாயத்திற்கு எறும்பு என்று பெயர் வைத்து எறும்புடைய செய்தியையும் நமக்கு சொல்கிறானே அதன் நோக்கமென்ன.

حَتَّىٰ إِذَا أَتَوْا عَلَىٰ وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ
فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)என்று கூறிற்று.
அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார்.

 இன்னும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!என்று பிரார்த்தித்தார்.

 படைப்பில் சிறியதான பகுத்தறிவில்லாத சிறு எறும்பு தன் இனத்தின் மீது சகோதரபாசத்தோடு கவலைப்படுகிறதே மனிதனே நீ உன் இனத்தின் மீது கவலைப்பட வேண்டாமா உன் இனத்தை உண்மையாக நேசிக்க வேண்டாமா என்பதை அல்லாஹ் நமக்கு உணர்த்துவதற்காகத்தான் பதிவு செய்திருக்கிறான்.
 
அல்லாஹ் நம்மிடம் உண்மையான அன்பை ஏற்படுத்தி உள்ளத்தால் ஒன்று பட்டு சகோதரர்களாக வாழ வழிசெய்வானாக

وَلا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ

 (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவை யுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்கு கடுமையான வேதனை உண்டு.  (அல்குர்ஆன் 3:105)
.



5 comments: