Wednesday 9 July 2014

பாவத்தின் சம்பளம் மன்னிப்பு




உலகில் மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பிரதிபலிப்பு உண்டு.அது நல்லசெயலாக இருந்தால் அதன் விளைவுகளும் நல்லதாகவே அமையும்.அவ்வாறே பாவத்திற்கான விளைவுகளும் படுமோசமான முடிவை தேடித்தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒரு முஃமின் பாவத்தை தேள் போன்று காண வேண்டும்.தேள் அளவில் சிறியதாக இருப்பினும் அதன் விஷத்தன்மைமிகவும் ஆபத்தானது,அதனாலே அதைக்கண்டு பயம்கொள்ளாதவர்கள் கிடையாது.

பாவம் கேன்ஸர் நோயைபோன்றது.சிறியதாக இருக்கும்போதே அதை கவனிக்காவிட்டால் இறுதியில் அது உயிருக்கே ஆபத்தை தேடித்தரும் என்று அல்லாமா துல்பிகார் கூறுகிறார்.

பாவம் சிறியதாக இருப்பினும் அதன் பாதிப்புக்கள் கடுமையாகவும் கைசேதமாகவும் அமைந்துவிடும்.இந்த பாவம் எல்லோரும் செய்கிறார்கள்.இதை விட்டும் விலகுவது கஷ்டமான காரியம்.இதை தவிர்த்துவிட்டு இன்று வாழ முடியாது போன்ற வாதங்களை முன் வைத்து ஷைத்தான் முஃமின்களை பாவத்திற்கு தூண்டுகின்றான்.
சிறிய பாவங்கள் என்று நினைத்து சாதாரணமாக கருதிவிடாதே! சிறு கற்கள் சேர்ந்ததே பெரும் மலையாக இருக்கிறது.

பாவத்தை ஒரு முஃமின் பார்க்கும் பார்வையையும் ஒரு முனாபிக் பார்க்கும் பார்வையையும் நபி ஸல் அவர்கள் விளக்கி கூறினார்கள்.
ஒரு முஃமின் பாவத்தை தன் மீது சுமத்திய மலையாக பார்ப்பான்.  ஒரு முனாபிக் தன் மீது உட்கார்ந்திருக்கும் ஈயைப்போல காண்பான் என்றார்கள்.

إِذْ تَلَقَّوْنَهُ بِأَلْسِنَتِكُمْ وَتَقُولُونَ بِأَفْوَاهِكُم مَّا لَيْسَ لَكُم بِهِ عِلْمٌ وَتَحْسَبُونَهُ هَيِّنًا وَهُوَ عِندَ اللَّـهِ عَظِيمٌ

இப்பழியை உங்கள் நாவுகளால் எடுத்துச் சொல்லிக் கொண்டு, உங்களுக்கு அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள்.ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய பாவமானதாக இருக்கும்.

படைத்தவனுக்கு எதிராக செய்யப்படும் எந்த பாவமும் அது பெரும் பாவமே. அதில் சிறியது என்று ஒன்றுமில்லை என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகின்றார்கள்.

எந்த பாவத்தையும் தொடர்ந்து செய்தால் அது பெரும்பாவமாகும் என்பது மார்க்க அறிஞர்களின் தீர்ப்பாகும்.
நண்பா! பாவத்தை சிறியது,பெரியது என்று தரம் பிரிக்காதே!அதை யாருக்கு எதிராக செய்யப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் கவனி என அல்லாமா இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

பாவம் ஆபத்தானது,அதை விடவும் ஆபத்தானது நான்கு உள்ளது

1.பாவத்தை இலேசாக கருதி செய்வது
2.பாவம் செய்வதை கொண்டு மகிழ்ச்சியடைவது
3.பாவத்தை தொடர்ந்து செய்வது
4.பாவத்தை கொண்டு பெருமையைடிப்பது

           பாவத்தின் பிரதிபலிப்புக்கள்

பாவத்தின் முதல் பிரதிபலிப்பு என்னவெனில் நம்முடைய உள்ளத்தை இருளடையச்செய்வது

كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا يَكْسِبُونَ

அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன என்று அல்லாஹ் கூறுகிறான்.சில நேரங்களில் பாவங்கள் கவலையையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும்.
உள்ளம் இருளடைவதால் வணக்கங்கள் புரிவதில் சோம்பலும் பாவம் செய்வதில் துணிச்சலும் உண்டாகிறது.இந்நிலை தொடருமானால் பாவங்கள் நல்லவைகளாக தெரிய ஆரம்பித்துவிடும்.இது மிகவும் ஆபத்து.

நம்மை சுற்றி நடக்கிற எந்த நிகழ்வுகளுக்கும் நாம் செய்யும் பாவத்துடன் தொடர்புடையது என்பதை மறந்துவிடக்கூடாது.அதனால் தான் ஸாலிஹீன்களான நல்லோர்கள் தங்கள் வாழ்வில் ஏதாவது சோதனை வந்தால் இன்று நான் என்ன பாவம் செய்தேன் என்று யோசிப்பார்களாம்.

ஹழ்ரத் புழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்
நான் ஒரு பாவத்தை செய்யும்போது அதன் விளைவுகளை என் மனைவியிடம்,அல்லது என் மக்களிடம் அல்லது என் வேலைக்காரர்களிடம் காண்பேன். நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்போது இவர்கள் எனக்கு மாறு செய்வார்  கள்.என் மனைவி என் சொல்லுக்கு ஏன் கட்டுப்படவில்லை என்ற கேள்விக்கு விடையை நான் வேறு எங்கும் தேட தேவையில்லை.படைப்பாளனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையில் உள்ளஉறவு சரியானால் படைப்புகளுக்கிடையில் உள்ள உறவு தானாக சரியாகிவிடும்
ஜகாத்தை மக்கள் தடுக்கும்போது அல்லாஹ் மழையை தடுக்கின்றான்.விபச்சாரத்தை மக்கள் அங்கீகரிக்கும்போது அல்லாஹ் நோய்களை இறக்குகின்றான் போன்ற ஹதீஸ்களை நாம் கேள்விப்பட்டதுண்டுதானே!

வானத்திலிருந்து வரும் ஒவ்வொரு உத்தரவுக்குப்பின்னும் பூமியில் வாழும் மனித செயல்பாடுகள் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.

قال جبير: لما فتحت قبرص رأيت أبا الدرداء جالساً وحده يبكي فقلت يا أبا الدرداء، ما يبكيك في يوم أعزَّ الله فيه الإسلام وأهله؟ قال: "ويحك يا جبير، ما أهون الخلق على الله، إذا هم تركوا أمره، بينما هي أمة قاهرة ظاهرة لهم الملك تركوا أمر الله فصاروا إلى ما ترى".
கப்ரஸ் நகரத்தை கைப்பற்றியபோது அபுத்தர்தா ரலி அவர்கள் தனிமையில் உட்கார்ந்து அழுதார்களாம்.முஃமின்களுக்கு அல்லாஹ் கண்ணியத்தை வழங்கிய இந்த நாளில் ஏன் அழுகிறீர்?என காரணம் கேட்டபோது-எதிரிகள் எத்துனை பலமான சமுதாயம்.அவனுக்கு கட்டுப்படாமல் பாவம் செய்தபோது அல்லாஹ் அவர்களை இந்தளவு இழிவு படுத்திவிட்டான்.இதை நாம் படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியதாக ஜுபைர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

பாவத்தால் ஹிப்ழ் பறிபோனது

ஹழ்ரத் ஜுனைத் பக்தாதி ரஹ் அவர்கள் தங்களின் ஒரு சீடருடன் சென்று கொண்டிருந்தார்கள்.அப்போது எதிரே அழகான ஒரு கிருஸ்துவப்பெண் தோற்றம் தருகிறாள்.அதை கவனித்த அந்த சீடர் தன் ஷைகிடம்,ஷைக் அவர்களே! நாளை மறுமையில் இப்படிப்பட்ட முகமும் நரகில் வீசப்படும் தானே என்று கேட்டார்.அதற்கு ஜுனைத் ரஹ் அவர்கள் தன் சீடரிடம் தவ்பா செய்யுங்கள் என்றார்கள்.நீங்கள் அந்த பெண்ணை இச்சையுடன் பார்த்துவிட்டீர் என்றும் கூறினார்கள்.ஆனால் தன் தவறை ஒப்புக்கொள்ளாத அந்த சீடர் தன் ஷைகிடம் நான் பாவம் செய்யவில்லை.கேள்வி மட்டுமே கேட்டேன் என்று வாதம் செய்தார்.இறுதிவரை தவ்பா செய்யவில்லை.அதன் விளைவு ஹாபிழாக இருந்த அந்த சீடர் இருபது ஆண்டுக்கு பின் முழு குர்ஆனையும் மறந்துவிட்டார்.

இந்த இடத்தில் இமாம் ஷாபிஈ ரஹ் அவர்களின் ஒரு செய்தியையும் ஞாபகம் செய்துகொள்வது பொருத்தமாகும்.
தன் ஆசிரியர் வகீஃ ரஹ் இடம் தனக்கு மறதி அதிகமாக நிகிழ்கிறது என இமாம் ஷாபீஈ ரஹ் அவர்கள் முறையிட்டார்கள்.அதற்கு உஸ்தாத் வகீஃ ரஹ் அவர்கள் பாவத்தை விட்டுவிடு என்று உபதேசம் செய்தார்கள்.
பொதுவாக ஒருபாவம் மன்னிக்கப்படுவதற்கான முதல் தகுதி அந்த பாவத்தை ஒப்புக்கொள்ளவேண்டும்.பாவத்தை ஒப்புக்கொள்வதே தவ்பாவுக்கான முதல் வாசல்.பாவம் செய்தவனை விட அதை நியாயப்படுத்துபவன் மிகவும் ஆபத்தானவன்.

இப்லீஸ் அல்லாஹ்வின் கட்டளையை மறுத்து முதல் பாவத்தை அரங்கேற்றியபோது ஒரு வேளை அல்லாஹ் மன்னித்து இருக்கலாம்.ஆனால் அவன் மன்னிக்கப்படாமல் சபிக்கப்பட்டற்கு காரணம் தான் செய்த பாவத்தை நியாயப்படுத்தினான்.
நான் நெருப்பால் படைக்கப்பட்டவன்.அவர் மண்ணால் படைக்கப்பட்டவர். எப்படி ஸஜ்தா சாத்தியம்?என்றான்.இதுவே பாவத்தின் பின் வைக்கப்பட்ட முதல் நியாயம்.

பாவத்தை எண்ணும்போது பயமும் பாவத்தை செய்யும்போது கவலையும் வரவில்லையென்றால் உன் ஈமான் ஆபத்தில் உள்ளது என சிர்ரிசிக்தி ரஹ் அவர்கள் கூறுவார்கள்.
மரண நேரத்தில் போராடிக்கொண்டிருந்த ஒருவருக்கு கலிமா ஞாபகப்படுத்தப் படுகிறது.அவரோ உறுதியாக அதை சொல்ல மறுக்கிறார்.இறுதியில் அதே நிலையில் மரணித்துவிட்டார்.
அவரின் இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு என்ன காரணம் என அவரின் குடும்பத்தாரிடம் விசாரித்தாபோது தெரிய வந்தது.அவர் மார்க்க சட்டங்களை கேலி செய்வார்.பெருந்தொடக்கு ஏற்பட்டால் குளிக்க மாட்டார்.இஸ்ரவேலர்க ளுக்கு ஜனாபத்தானால் குளிப்பு கடமையில்லை என்றும் பேசிக்கொள்வார் என தெரிவித்தனர்.

இணைவைப்பும் இறைமறுப்பும் மட்டுமே ஈமான் பறிபோக காரணமாக சொல்ல முடியாது.பல நேரங்களில் ஈமான் பறிபோக பாவங்களும் காரணமாக அமைந்துவிடும்.

பல்ஆம் இப்னு பாவூராவின் வாழ்வு இதற்கு சரியான சான்று.
அல்லாஹ் அவருக்கு ஒரு அத்தாட்சியல்ல. பல அத்தாட்சிகளை வழங்கியதாக கூறுகின்றான்.பூமியில் இருந்து அல்லாஹ்வின் அர்ஷை பார்ப்பதும்,வாழ்நாளில் அவர் செய்த எந்த துஆவும் மறுக்கப்பட்டதில்லை என்பதும் இஸ்முலஃலம் எனும் அல்லாஹ்வின் விசேஷ திருநாமத்தை அறிந்திருப்பதும்,தவ்ராத் வேதம் முழுவதும் மனனம் செய்த நான்குபேரில் ஒருவராக அவர் இருந்ததும் அவர்பெற்ற அற்புதங்களில் உள்ளதாகும்.

இந்தளவு தூரம் இறைநெருக்கம் பெற்ற ஒருவரை அல்லாஹ் ஈமானை பிடுங்கி சபித்த வார்த்தையை கவனியுங்கள்

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ
وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَـٰكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ ۚ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث
(நபியே!) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக்காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான் - அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான்
நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது என்று கூறுகின்றான்.

பல்ஆம் நேரடியாக இணைவைப்பு,இறைமறுப்பு போன்ற காரியங்களில் ஈடுபடவில்லை.நபி மூஸா அலை அவர்களுக்கு எதிராக துஆவுக்காக கையேந்தினார் எனும் பாவமே அவரின் ஈமான் இழப்புக்கு காரணமாகிவிட்டது.  அவர்  பல்ஆமின் ஈமான் பறிப்புக்கு காரணத்தை ஒரு பின்னர் வந்த ஒரு நபி அல்லாஹ்விடம் கேட்டபோது, நான் கொடுத்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக இருக்கவில்லை என்று அல்லாஹ் சொன்னானாம்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் நபிமார்கள் பாவத்தை ஒப்புக்கொள்வதை பின்வருமாறு சுட்டிக்காட்டுகின்றான்.
நபி ஆதம் அலை அவர்களும் ஹவ்வா அலை அவர்களும் செய்த துஆ

قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

அதற்கு அவர்கள்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்
நபி யூனுஸ் அலை அவர்கள் இப்படி பாவமன்னிப்பு கேட்டார்கள்

لَّا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்" என்று பிரார்த்தித்தார்.

பாவத்திற்கான பிரதிபலிப்புக்கள் நம் ஈமானை காவுவாங்கும் முன் நாம் மன்னிப்பு தேடி அதிலிருந்து மீட்சி பெறவேண்டும்.ரமலான் மாதம் பாவ மன்னிப்பிற்கான சரியான மாதம்.

قال صلى الله عليه وسلم"رغم انف امرئ ثم رغم انف امرئ ثم رغم انف امرئ"
ق
ال الصحابة"خاب وخسر يا رسول الله,من هو؟" قال "من ادرك رمضان ولم يغفر له"
ஒரு மனிதன் நாசம் அடைந்தான் என்று நபி ஸல் அவர்கள் மூன்றுமுறை கூறியபோது நஷ்டமடைந்த அந்த மனிதன் யார்? என ஸஹாபாக்கள் வினவினர்.அதற்கு நபி ஸல் அவர்கள்,ரமலானை அடைந்தும் அவன் தன் பாவத்திற்கு மன்னிப்பு தேடிக்கொள்ளாதவன் என்றார்கள்.
பாவத்தின் பிரிதிபலிப்பும் வீரியமும் கடுமையாது தான் என்றாலும் அல்லாஹ்வின் அன்பும் கருனையும் அதைவிடவும் விசாலமானது என்பதை ஒரு முஃமின் எப்போதும் மறந்துவிடக்கூடாது.
இனி தப்பிக்க வழியில்லை,ஆதரவில்லை எனும் கடைசி நிலையிலும் மன்னிப்பின் நம்பிக்கையை ஒரு முஃமின் கைவிட்டுவிடக்கூடாது.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நாளை மறுமையில் இரண்டு பேர்கள் அழைக்கப்படுவார்கள்.அவர்கள் இருவரும் பாவத்தால் தங்கள் முழு வாழ்வையும் நாசமாக்கியவர்கள். நீங்கள் இருவரும் நரகம் செல்லுங்கள் என்று அல்லாஹ்வின் உத்தரவு வருகிறது.அதில் ஒருவன் வேகமாக நரகத்தை நோக்கி நடைபோட்டான்.இன்னொருவன் அல்லாஹ்வை திரும்பி பார்த்துக்கொண்டே சென்றான்.
அவ்விருவரையும் அல்லாஹ் மீண்டும் அழைத்து வரச்சொல்லி விசாரித்தான்.நரகம் செல் என்றவுடன் உடனே செல்கிறாயே,என்ன துணிச்சல் உனக்கு? என்று அல்லாஹ் முதல் மனிதனிடம் கேட்டபோது,அதற்கு அவன்  யா அல்லாஹ் உலகில்தான் உன் சொல்லுக்கு கட்டுப்படவில்லை,இங்காவது கட்டுப்படுகின்றேனே என்பானாம்.இந்த பதிலை திருப்திகொண்ட ரப்புல் ஆலமீனான அல்லாஹ் அவனை சுவனத்திற்கு அனுப்பிவைப்பானாம்.
என் உத்தரவு வந்தும் உடனே செல்லாமல் திரும்பி பார்க்க காரணம் என்ன?என இன்னொருவனிடம் விசாரனை செய்தபோது.அதற்கு அவன் யா அல்லாஹ்!என்னை நீ எப்படியும் மன்னித்து விடுவாய் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்.நரகின் வாசல்வரை சென்றாலும் உன் அருள்மீதான நம்பிக்கை எனக்கு குறையவில்லை என்றானாம்.அப்போது கிருபையாளனான அல்லாஹ் என்னை நம்பியவர்களின் நம்பிக்கையை நான் வீணாக்க மாட்டேன்.உன்னை மன்னித்துவிட்டேன் நீயும் சுவனம் செல் என்பானாம்.

வானத்தை விட நாம் செய்த பாவம் பெரிதாக இருக்கலாம்.பூமியை விட நம்மின் பாவம் பெரிதாக இருக்கலாம்.ஏன் அல்லாஹ்வின் அர்ஷைவிட நம் பாவம் கனமாக இருக்கலாம்.ஆனால் அல்லாஹ்வின் அன்புக்கு முன்னால்?  அவனின் அருளுக்கு முன்னால்?
அல்லாஹ்வின் தர்பாரில் அவனின் கட்டளையை மறுத்து,அவனிடம் எதிர்த்து பேசிய இப்லீஸ் அல்லாஹ்விடம் வைத்த ஒரு கோரிக்கை

قَالَ رَبِّ فَأَنظِرْنِي إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
قَالَ فَإِنَّكَ مِنَ الْمُنظَرِينَ
إِلَىٰ يَوْمِ الْوَقْتِ الْمَعْلُومِ

"என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!" என்று இப்லீஸ் கூறினான்
குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில் நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய் என்று அல்லாஹ் கூறினான்.
சபிக்கப்பட்ட இப்லீஸ் மீதே அல்லாஹ் இந்தளவு இறக்கம் காட்டினான் என்றால் நம்மீது காட்டமாட்டானா?
ஆதம் அலை அவர்கள் பாவம் செய்தபோது அந்த பாவத்தை விட்டும் தப்பிக்க பாவமன்னிப்பு தேடவேண்டும் என்பதை அல்லாஹ்வே சொல்லிக்கொடுத்தான் என்பது ஆச்சரியமல்ல,எப்படி கேட்டால் நான் ஏற்றுக் கொள்வேன் என்பதையும் அவனே சொல்லிக்கொடுக்கின்றான்.
அவன்சொல்லிக்கொடுத்த கலிமா இதுதான்:
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
என் வேதனை கடுமையானது தான்,ஆனாலும் நான் மிகவும் கிருபையாளன் மன்னிப்பவன் என்பதை என் அடியார்களுக்கு சொல்லுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ ﴿٤٩﴾ وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ  இந்த வசனம் கஃபாவின் திரையில் எழுதப்பட்டிருக்கும் வசனங்களில் ஒன்று.இதை கொஞ்சம் உற்றுநோக்கி கவனியுங்கள் அல்லாஹ் தன் அடியார்களுக்கு தன்னுடைய அருளை மன்னிப்பை தான் எடுத்துச்சொல்ல சொல்கின்றான்.
பலமான எழும்புகளுக்கு மேலால் இலேசான சதையைக்கொண்டும் தோளைக்கொண்டும் அல்லாஹ் சுற்றியிருப்பது போல கடுமையான அல்லாஹ்வின் கோபத்தை அவனின் அருளை கொண்டு சுற்றி மறைத்துவைத்திருக்கின்றான்.
ஒரு அடியான் பாவத்தை செய்துவிட்டு இரவு தன் படுக்கைக்கு வருகிறான்.யா ரப்பு என்று ஒரு வார்த்தை சொன்னான்.அல்லாஹ் அவன் பாவத்தை மன்னித்து விட்டான்.காரணம் கேட்டபோது யா அல்லாஹ் என்னை மன்னித்து விடு என்று சொல்ல வந்தான். தூக்கம் மிகைத்த்தால் தூங்கிவிட்டான்.என்று அல்லாஹ் சொன்னானாம்.
பாவ மன்னிப்பின் வாசலை அல்லாஹ் எவ்வளவு விசாலமாக திறந்துவைத்திருக்கின்றான் எனபதை நாம் சிந்திக்கிறோம்.இங்கு ஒரு ஹதீஸை நிறைவாக தருவது பொருத்தமாகும்.

عن أبي عبدالله عليه السلام قال: قال رسول الله صلى الله عليه وآله: من تاب قبل موته بسنة قبل الله توبته، ثم قال: إن السنة لكثيرة من تاب قبل موته بشهر قبل الله توبته، ثم قال إن الشهر لكثير، من تاب قبل موته بجمعة قبل الله توبته، ثم قال: إن الجمعة لكثير من تاب قبل موته بيوم قبل الله توبته، ثم قال: إن يوما لكثير من تاب قبل أن يعاين قبل الله توبته.
யார் தன் மரணத்திற்கு ஓராண்டிற்கு முன் தவ்பா செய்வாரோ அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்வான்.ஒரு வருடம் அதிகம்தான். யார் தன் மரணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன் தவ்பா செய்வாரோ அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்வா ன்.ஒரு மாதம் கூட அதிகம்தான். யார் தன் மரணத்திற்கு ஒரு ஜும்ஆற்கு முன் தவ்பா செய்வாரோ அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்வான்.ஒரு ஜும்ஆவும் அதிகம் தான். யார் தன் மரணத்திற்கு ஒரு நாளைக்கு முன் தவ்பா செய்வாரோ அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்வான். ஒரு நாளும் கூட அதிகம் தான்.யார் மரண நிகழ்வுகளை கண்ணால் காணும் முன் தவ்பா செய்வாரோ அல்லாஹ் அவரின் தவ்பாவை ஏற்றுக்கொள்வான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
தவ்பாவின் நான்கு நிபந்தனைகள்
1.நாவால் விண்ணப்பித்து இஸ்திங்பார் ஓதுவது
2.உள்ளத்தால் கவலைப்பட்டு இனி அந்த பாவத்தை செய்யமாட்டேன் என்று உறுதியடுப்பது
3.உடலால் இனி பாவம் நிகழாமல் பார்த்துக்கொள்வது
4. பாவம் நிகழ காரணமான தொடர்பை துண்டிப்பது.
அன்பான உலமா பெருமக்களே! புனித ரமலான் காலத்தில் உங்களின் மேலான துஆவில் என்னையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.



4 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ் அற்புதமான ஹதீஸ்கள் மிகவும் பயனுள்ள கட்டுரை

    ReplyDelete
  2. கண்ணியத்திற்குரிய உலாமப் பெருந்தகையின் சமூகத்திற்கு அஸ்ஸலாமு அலைக்கும் ,

    தமிழக இஸ்லாமிய சமூகத்தை கூறுபோடும் வஹாபிய இயக்கங்களில் தப்லீக் ஜமாஅத் வஹாபிய மூகமூடியை தோலுரிக்கும் வண்ணம் ஒரு சிறிய முயற்சியாக ஒரு பதிவுதளம் உருவாக்கியுள்ளேன் . http://tableeghijamaathtamil.blogspot.com/

    இந்த பதிவில் ஏதேனும் எழுத்துப் பிழைகளோ அல்லது மொழிபெயர்ப்பு பிழைகளோ இருந்தால் வாசகர்களும் , சங்கைக்குரிய உலமாப் பெருமக்களும் சுட்டிக் காட்ட வேண்டுகின்றோம் .
    அவ்வண்ணமே திருத்தம் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.
    வல்ல ரஹ்மான் இந்த சிறிய முயற்சியை அவன் ஹபீபாகிய எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் பொருட்டால் ஏற்றுக்கொள்வானாக .

    யா அல்லாஹ் ! உண்மையை உண்மை என்று நாங்கள் உணர்ந்து அவ்வுண்மையை நாங்கள் பின்பற்றி நடக்கும்படி உணர்த்தி நேர்வழி காட்டியருள் !
    பொய்யை பொய் என நாங்கள் உணர்ந்து அப்பொய்யை விட்டு அகன்று நடக்கும்படியாக விளக்கப்படுத்தி நேர்வழி காட்டியருள் !
    ஆமீன் !!!




    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்
    நரகத்திற்கு செல்லவிருந்த இருவரை அல்லாஹ் மன்னித்தான் என்று வரும் ஹதீஸ் ஆதாரம் தாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. அது ஆதாரமற்ற கதை

      Delete